அத்தியாயம் 40

ஊதல், ஊதல், ஊதல், ஊதினால் சாதல், சாதல், சாதல்!

நல்ல இருளில் திடீரென வீசிவிட்ட விளக்கொளி போல, அக்ஷயமுனைக் கோட்டையின் பெரு ரகசிய மொன்றைப் பளீரென விளக்கிவிட்ட அந்த ஓலையை மீண்டும் மீண்டும் படித்த இளையபல்லவன் முகத்தில் பலப்பல உணர்ச்சிகள் பாய்ந்து சென்றன. “என்ன பயங்கர இரகசியம் இது, எத்தனை மர்மங்களை விளக்குகிறது?” என்று அவன் உதடுகள் மீண்டும் மீண்டும் முணு முணுத்தன. பல விநாடிகள் அத்தகைய முணுமுணுப் புடனும் தீவிர சிந்தனையுடனும் திரும்பத் திரும்ப அந்த அறையில் அங்குமிங்குமாக நடந்த இளையபல்லவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் அறையின் நடுவே நின்று இருமுறை தன் தலையை அசைத்துக் கொண்டதன்றி உறுதி நிரம்பிய கண்களை அமீரின் முகத்தின் மீதும் புரட்டி, “அமீர்! இப்பொழுது புரிகிறதல்லவா இந்தக் கோட்டை யின் நிலவரம் உனக்கு?” என்று வினவினான்.

அதுவரை அமீரின் முகத்திலிருந்த திகைப்பும் வியப்பும் மறைந்து அவை இருந்த இடத்தைக் குழப்பம் ஆக்கிரமித்துக் கொள்ளவே, “இந்தக் கோட்டையின் நிலவரத்தைப் பற்றி இதில் ஏதுமில்லையே!’” என்றான் குழப்பம் குரலிலும் தொனிக்க.

“நேர்முகமாக இல்லை அமீர். ஆனால் இதில் கண்ட இரகசியத்தைப் பலவர்மன் செய்கைகளுடன் இணைத்துப் பார், இந்நாட்டு மன்னனின் போக்குடன் இணைத்துப் பார்.” என்று கூறிய இளையபல்லவன் அமீரை மீண்டும் கூர்ந்து நோக்கி, “அமீர், ஸ்ரீவிஜயத்தின் உபதளபதியின் படமொன்றை நீ பலவர்மன் அறையில் பார்த்தா யல்லவா!” என்றும் வினவினான்.

ஆமாம், பார்த்தேன்.” என்றான் அமீர் மேலும் குழப்பம் அதிகரிக்க.

“அந்த உபதளபதி பலவர்மனால் இந்த அக்ஷய முனையில் கொல்லப்பட்டிருக்கிறான், “ என்று சுட்டிக் காட்டி அர்த்தபுஷ்டியுடன் அமீரைப் பார்த்தான் இளைய பல்லவன்.

“ஆமாம். படத்தின் கீமுள்ள குறிப்பு அதை மறை முகமாக உணர்த்துகிறது.” என்றான் அமீர்.

இளையபல்லவன் விழிகள் பெரிதும் பளிச்சிட்டன. “ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் உபதளபதி கொல்லப் படுகிறான். அதைப்பற்றிச் சாம்ராஜ்யாதிபதி கவலைப் படாதிருக்கிறான். கொன்றவன் ஒரு கோட்டையின் தலைவன். இஷ்டப்படி சுதந்திரமாக உலாவுகறான். இது விசித்தரமாயில்லையா உனக்கு?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“ஆம், ஆம். விசித்திரமாயிருக்கிறது?” என்றான் அமீர்.

“அதுமட்டுமல்ல, கொள்ளையரையும் கடற்கரையில் வைத்து ஆதரிக்கிறான் ஒரு நாகரிக சாம்ராஜ்யத்தின் துறைமுகத் தலைவன் ஒருவன். அதைப்பற்றியும் கேள்வி கேட்பதில்லை சாம்ராஜ்யாதிபதி” என்று குறிப்பிட்டான் இளையபல்லவன்.

“கேட்பதாகத் தெரியவில்லை.” என்றான் அமீர்.

ஏன்? ஏன் கேட்கவில்லை?” என்று திடீரெனக் கேள்வியை வீசினான் இளையபல்லவன். அவன் குரல் மிக உஷ்ணத்துடன் ஒலித்தது.

“அதுதான் புரியவில்லை.” என்றான் அமீர்.

“எனக்குப் புரிகிறது. நன்றாகப் புரிகிறது. சாம்ராஜ் யாதிபதியான ஜெயவர்மன் பலவர்மனை எதுவும் கேட்க முடியாது. கேட்கும் நிலையில் இல்லை, அதை இந்த ஓலை தெளிவாக்குகிறது.” என்று இருமுறை ஓலையைத் தன் கையால் தட்டியும் வலியுறுத்தச் சொன்னான் இளைய பல்லவன்.

அமீரின் கூரிய புத்தியையும் ஏமாற்றிய அந்த ஓலை அப்பொழுதுதான் அமீரின் புத்தியிலும் உண்மையை மெள்ள மெள்ள வீசத் தொடங்கவே அமீரின் முகத்தில் பெரும் பிரமிப்பு விரிந்தது. “சரி, சரி, அதுதான் பலவர்மன் இங்கு தனியரசு செலுத்துகிறானா!” என்றும் கேட்டான் அமீர் பிரமிப்பு பூ்ர்ணமாகத் தொனித்த குரலில்.

“ஆம் அமீர், சுயநலத்தையும் சுயபலத்தையும் தவிர வேறெதையும் வாழ்க்கையில் அறியாத வஞ்சகனான பலவர்மன், ஸ்ரீவிஜய சக்கரவர்த்தியின் பெரும் ரகசிய மொன்றைக் கையில் வைத்துக்கொண்டு அவனை அதைக் கொண்டே மிரட்டி அக்ஷயமுனைப் பக்கம் கால் வைக்காமல் அடித்திருக்கிறான். இந்த ஓலை என்றும் அவனுக்கு விஜயவர்மனிடமிருந்து பாதுகாப்பை அளிக்கும்.” என்றான் இளையபல்லவன்.

“அதுமட்டுமல்ல இளையபல்லவரே, வேறொருவரிட மிருந்தும், பாதுகாப்பளிக்கும், அந்த...” என்று ஏதோ சொல்லப்போன அமீரைத் தடைசெய்த இளைய பல்லவன், “அமீர்! அந்தப் பெயரைச் சொல்லாதே. இங்கு சுவர்களுக்கும் ரகசியத்தைக் கேட்கும் சக்தி உண்டு. பலவர்மன் ஒற்றர்கள் சதா நம்மீது கண் வைத்திருக்கிறார்கள். சொல்லி வந்த அந்த மனிதர் இதில் சம்பந்தப் பட்டிருப்பது நம்மிருவருக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.” என்று எச்சரிக்கையும் செய்தான்.

சரியென்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிய அமீரின் முகத்தில் தவிர சிந்தனை படர்ந்தது. இருவரும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டதால் நீண்ட நேரம் அந்த அறையில் மெளனமே நிலவியது. அந்த அறையி லிருந்த விளக்குச் சுவர்கூட அந்த ரகசியத்தின் விளைவு களைப் புரிந்து கொண்டது போல் கடற்காற்றில் அலைந்து இரண்டு மூன்று முறை நடுங்கியது. காற்றும் பயந்து கொண்டு கிழக்கு வாயிற்படிக்கு மேலேயிருந்த துவாரங் களின் வழியாக மெள்ளவே அறையில் நுழைந்தது. அத்தகைய சூழ்நிலையில் தன் பஞ்சணையை நோக்கு நடந்து அதில் உட்கார்ந்துகொண்ட இளையபல்லவன் தலையை முழந்தாள்களை நோக்கித் தொங்கப் போட்டுக் கொண்டு பல நிமிஷங்கள் யோசனையில் ஆழ்ந்தான். கடைசியாக ஓரு முடிவுக்கு வந்து அமீரைக் கட்டே அழைத்து, “தலையைக் குனி” என்றான்.

அமீர் தலையைக் குனிய அவன் காதுக்கருகில் ஏதோ மடமடவென்று கூறினான் இளையபல்லவன். அந்தச் சொற்களைக் கேட்கக் கேட்க அமீரின் முகத்தில் இருந்த வியப்பு திகைப்பு எல்லாம் மறைந்து உற்சாகமும் குதூ கலமும் குடிகொள்ளத் தொடங்கின. இளையபல்லவன் பேசி முடித்ததும் நன்றாக நிமிர்ந்து நின்றுகொண்ட அமீர் ராட்சதச் சிரிப்பு சிரித்தான். “மிகவும் சரி, மிகவும் சரி” என்று கூறி இளையபல்லவனின் கருத்தை அமோதிக்கும் முறையில் தலையைப் பலமாகவும் ஆட்டினான். அத்துடன் இளையபல்லவனிடம் விடை பெற்றுக்கொண்ட அமீர் தன் மனத்திலிருந்து பெரும் சுமையொன்று இறங்கிவிட்டதற்கு அடையாளமாகப் பெரும் மகிழ்ச்சியுடன் மாடிப்படிகளில் இறங்கிச் சென்றான்.

நாள்கள் நான்கு ஒடின. அந்த நான்கு நாள்களில் நடந்த பல விஷயங்களின் காரணம் அக்ஷயமுனையிலிகுந்த பல பேருக்குப் புரியவில்லை. புரியாததால் அதைப்பற்றி நானாவிதமாக நகர மக்கள் பேசவும் முற்பட்டார்கள். அந்தப் பேச்சுகள் மஞ்சளழகியின் காதிலும் விழுந்ததால் அவள் பெரிதும் நிலைகுலைந்தாள். அடுத்த சில தினங் களில் இளையபல்லவன் வெறி பிடித்தவனைப் போல் நடந்துகொண்டதையும் கண்டபடி முன்னுக்குப் பின் முரணான உத்தரவுகளைப் பிறப்பித்ததையும் கண்ட நகர மக்கள் ஒருவேளை சோழர் படைத்தலைவன் மூளை குழம்பிவிட்டதோ என்றுகூட நினைத்தார்கள். மறுநாளி லிருந்து தனக்குக் காவலர் யாரும் தேவையில்லையென்று மாடியறைக் காவலரைக் கூடக் கடற்கரைக் குடிசைகளுக்கு அனுப்பிவிட்ட இளையபல்லவன், இனசரி இரவிலும் பகலிலும் குடியில் இறங்கி பலவரா்மன் மாளிகையில் பெரும் கொட்டம் அடித்துக் கொண்டிருந்தான். ஊருக்குள்ளும் தாறுமாறாகத் திரிந்தகொண்டு கண்ட சண்டைகளை விலைக்கு வாங்கிக்கொண்டான். குடிக்காமலிருந்த வேளைகளிலும் அவன் போக்கும் உத்தரவுகளும் விபரீதமாயிருந்தன. இரண்டு நாள்களுக்கெல்லாம் தலை நீட்டிய அமாவாசை இரவில் வெகு வேகமாகக் கடற்கரையை அடைந்த இளையபல்லவன் கொள்ளையரில் சிலரைக் கூட்டி அவர்கள் மரக்கலங்களில் இரண்டை உடனடி யாகப் பாய்விரித்துக் கடலில் செல்லும்படி உத்தர விட்டான். அந்த மரக்கலமொன்றில் தனது மாலுமி யொருவனையும் அனுப்பி விவரம் புரியாத பல உத்தரவுகளையும் பிறப்பித்தான். “இரண்டு மரக்கலங்களும் கடாரத்துக்கும் சொர்ணத் தீவுக்கும் இடையேயுள்ள கடலில் இன்றிலிருந்து ஒரு மாதம் சஞ்சரிக்கட்டும்” என்று அந்த மரக்கலத்தின் தலைவர்களுக்குக் கூறினான்.

“எதற்காகச் சஞ்சரிக்க வேண்டும்?” என்று வினவி னான் அந்தக் கொள்ளைக் கப்பல்களின் தலைவர்களில் ஒருவன்.

“காரணம் உனக்குத் தேவையில்லை. சொல்கிறபடி செய். என் மாலுமி உங்களுக்கு வழி காட்டுவான்.” என்றான் இளையபல்லவன்.

“ஒரு மாதம் சஞ்சரித்த பிறகு?” என்று வினவினான் இன்னொரு மரக்கலத் தலைவன்.

“இங்கு வந்துவிடலாம்” என்று இளையபல்லவன் கூறினான்.

“இடையே மரக்கலங்கள் ஏதாவது தென்பட்டால்?” மீண்டும் எழுந்தது கொள்ளைக்காரன் கேள்வி.

“முடிந்தால் தாக்கலாம்.

“ஏன் முடியாது?”

“உங்கள் மரக்கலங்களைவிடப் பலமான மரக் கலங்கள் அங்கு உலாவும்.

“எப்படித் தெரியும் உங்களுக்கு?”

“சோதிடம் தெரியும் எனக்கு” என்று சொல்லி நகைத்த இளையபல்லவன் தனது மாலுமியை அருகில் அழைத்து அவன் தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு சற்று தூரம் அவனை இழுத்துச் சென்றான். சோழர் படைத் தலைவனும், அகூதாவின் உபதலைவருமான இளைய பல்லவன் தன் தோள்மீது சரிசமமாகக் கையைப் போட்டுக் கொண்டதால் சங்கடமடைந்த மாலுமியை, “சங்கடப் படாதே, சாதாரணமாக நடந்துவா” என்ற கடுமையான உத்தரவு அவனைப் பயத்துடன் நடக்க வைத்தது. அப்படி நடந்து வந்த மாலுமியிடம், “இரு மரக்கலங்களும் நான் கூறிய கடற்பகுதியில் சஞ்சரிக்கட்டும். அங்கு இன்னும் இருபது நாள்களுக்குள் சிவந்த கொடியுடன் ஒரு பெரும் மரக்கலம் வரும்...” என்று சொல்லிக்கொண்டு போன இளையபல்லவனைப் பிரமிப்புடன் நோக்கிய மாலுமி, “அப்படியா?” என்று இடை மறித்துக் கேட்டான்.

“ஆம்” என்று கூறிய இளையபல்லவன், “அவன் மரக் கலத்துக்கு நீ மட்டும் சென்று இந்த ஒலையைக் கொடுத்து விடு” என்று தன் மடியில் இருந்த ஓலையொன்றை எடுத்து மாலுமியின் கச்சையில் ரகசியமாகச் செருகினான். அத்துடன் அவனைத் திரும்பவும் நீர்க்கரைக்கு அழைத்து வரும் இரு மரக்கலத் தலைவர்களையும் நோக்கு, “நீங்கள் சிறந்த மாலுமிகள் என்பது எனக்குத் தெரியும். இருப் பினும் என் மாலுமியையும் உங்களுடன் அனுப்புகிறேன். உயிருக்கோ மரக்கலத்துக்கோ எந்தவித ஆபத்தும் நேரிடா மல் பாதுகாத்து இவன் திரும்ப அழைத்து வருவான்” என்று உத்தரவிட்டுக் கோட்டையை நோக்கிச் சென்றுவிட்டான்.

மறுநாள் திடீரென இரு மரக்கலங்கள் பாய் விரித்துச் சென்றுவிட்டதை மக்கள் பார்த்தனர். மஞ்சளழகி பார்த்தாள், பலவர்மனும் பார்த்தான். அப்படி அந்த மரக்கலங்கள் சென்றது, இளையபல்லவன் உத்தரவால் என்பதைக் கேட்ட மக்கள் மலைத்தனர். மஞ்சளழகி பிரமித்தாள். பலவர்மன் மகிழ்ந்தான். சூளூக்களின் தாக்கு தலைக் கடற்பகுதியில் சமாளிக்கவே இளையபல்லவன் கொள்ளையர் கப்பல்களைப் பெரும் போர்க்கலங்களுடன் சக்கர வட்டமாக நிறுத்தியிருக்கிறான் எஎன்பதை எண்ணி யிருந்த மக்கள் அவன் வேண்டுமென்றே மரக்கலங்களைப் போகச் சொல்லி, துறைமுகத்தைப் பலவீனமாக்கிவிட்ட தைக் கண்டு மலைத்தனர். சூளூக்கள் அந்த நிலையில் தாக்கினால் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பயமும் அடைந்தனர். மரக்கலங்கள் போனதும் பலவர்மன் பெரும் மகழ்ச்சி அடைந்தான். மரக்கலங்கள் போய்விட்டதை ஆட்சேபித்துக் குடிமக்கள் தலைவர் இருவர் ஆட்சேபித்த தற்கும், “இளையபல்லவர் உத்தரவை நான் தடுக்க முடியாது. இந்தக் கோட்டையின் பாதுகாப்பு அவர் கையில் அல்லவா இருக்கிறது!” என்று சமாதானம் கூறிவிட்டான். அடுத்த நான்கு நாள்களில் மற்றும் இரண்டு கொள்ளையர் மரக்கலங்கள் துறைமுகத்திலிருந்து மறைந்தன. பலவர்மன் மகழ்ச்சி கட்டுக்கடங்காததாயிற்று. அத்தனைக்கு அத்தனை மஞ்சளழகியின் வேதனை அதிகப்பட்டது. இளையபல்லவன் ஏற்றுக்கொண்ட வீண் சண்டை களையும் துறைமுகத்தைப் பலவீனப்படுத்த அவன் பிறப்பித்த உத்தரவுகளையும் பொறுக்கமாட்டாத அவள், அவனைச் சந்திக்கத் தீர்மானித்தாளானாலும் சந்திப்பது அத்தனை எளிதாயில்லை. கடைசியில் எதிர்பாராத விதமாகச் சந்தித்தபோது ஏற்பட்ட விளைவும் அவள் வேதனையைத் துடைக்கவில்லை.

அமாவாசை சென்று எட்டு நாள் கழித்து இளைய பல்லவனே அவளை நாடி வந்தான். அவள் அப்பொழுது மாளிகைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். வசந்தகாலத்தின் மலர்கள் நந்தவனத்தில் பூத்துக் கிடந்த தால் எங்கும் நறுமணம் மண்டிக் கிடந்தது. சற்று முன்னே உதயமான வெண்மதியும் தன் கதிர்களை மரக்கிளைகளின் வழியாகத் தோட்டத்தில் பாய்ச்சியிருந்தான். அந்த மரங்களின் நிழலில் மெல்ல நடந்து சென்ற மஞ்சளழகி ஒரு மரத்தில் சாய்ந்து நின்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள். சிந்தனை வெள்ளம் அவள் சித்தத்தில் பெருவேகத்துடன் பிரவாகித்துக் கொண்டி ருந்தது. அந்த வேகத்தைத் தடை செய்த குரல் ஒன்று அவளைத் திடுக்கிட வைத்தது. “நிற்பது யார்? என் மனைவியா?” என்று கேள்வி வந்த திக்கை அவள் நோக்கினாள். இளையபல்லவன் அவளை நோக்கி நடந்து வந்தான். இம்முறை அவன் நடையில் தள்ளாட்ட மில்லை. மதி ஒளி பாய்ந்த முகமும் வெறி முகமாயில்லை. பழைய வீரமுகமாகவே காட்சியளித்தது. சுய நினைவுடன் வரும் அவனிடம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும், அவனை முடியுமானால் நன்னெறிக்குத் திருப்பவும் மஞ்சளழகி, “இன்னும் மனைவியாகவில்லை” என்றாள் உஷ்ணத்துடன்.

அந்தச் சுடுசொற்கள் கூட அவள் வாயிலிருந்து இன்பமாகத்தான் உதிர்ந்தன. மரத்தில் சாய்ந்த உடலைச் சிறிது வளைத்துக் கொண்டாள் அவள். அதனால் நடன பாணி போலவே நின்ற மஞ்சளழகியைத் திடமாக நெருங்கிய படைத்தலைவன், “மனைவியாகாவிட்டா லென்ன, மனைவியாக வேண்டியவள்தானே?” என்று கூறி அவள் இடையில் தனது ஒரு கையையும் வைத்தான்.

அவள் அசையவில்லை. அவன் கையையும் அப்புறப் படுத்தவில்லை. “மனைவியாகுமுன் ஒரு பெண்ணைத் தொடுவது முறையல்ல.” என்றாள் அவள்.

அவன் மெல்ல நகைத்தான். “ஏற்கெனவே தொட்ட பெண்களைத் தொடுவதில் தவறில்லை. தவிர எங்கள் நாட்டில் காந்தர்வ மணம் என்பது ஒன்று உண்டு.” என்று கூறி அவளுக்குப் பக்கத்தில் அவனும் ஒருக்களித்துச் சாய்ந்தான்.

“அந்த மணத்துக்கு இருவரும் சம்மதப்பட வேண்டும்” என்று கூறினாள் மஞ்சளழகி. தன் உடலின் இடப்பக்கத்தில் மெல்லச் சாய்ந்த அவன் உடலைக் கையால்கூட நகர்த்தாமல்.

“ஏன் உனக்குச் சம்மதமில்லையா?”

“இல்லை.

“ஏன்?”

“உங்கள் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை.

“என்ன என் போக்கு?”

“அதிகமாகக் குடி க்கிறீர்கள்.

“சரி.

கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன்.

“கூடாது.

அடியோடு மது அருந்தக்கூடாது.

“சரி, விட்டுவிடுகிறேன்.

“எப்பொழுது?”

“ஒரு மாதம் கழித்து.

“ஒரு மாதம் எதற்கு?”

“நல்ல பழக்கங்களைச் சிக்கிரம் விட்டுவிடலாம். கெட்ட பழக்கங்களை ஒழிக்கக் காலம் தேவை!”

“நாளை முதல் சிறிது சிறிதாகக் குறைக்கிறீர்களா?”

“குறைக்கிறேன். ஆனால் இதை ஊதிப் பார்.” என்று கூறி கச்சையில் இருந்த சிறு கடற் சிப்பியொன்றை எடுத்து மஞ்சளழகியிடம் நீட்டினான் இளையபல்லவன்,.

மஞ்சளழகி இளையபல்லவனை உற்றுநோக்க, “இதை ஏன் ஊத வேண்டும்?” என்று கேட்டாள்.

“இந்தக் கடற்சிப்பி ஓர் ஊதுகுழல். இதிலிருக்கும் துவாரங்களைப் பார் இது எழுப்பும் ஒலி புது முறையில் இருக்கிறது. இப்படி வாயில் வைத்துப் பலமாக ஊத வேண்டும்.” என்று கூறி அவள் வாயில் அந்தச் சிப்பியின் ஒரு பாகத்தை வைத்து அழுத்தவும் செய்தான்.

மஞ்சளழகி அதை வெடுக்கென்று அவன் கையி லிருந்து பிடுங்கிக் கொண்டாள். “எதற்காக இதை நான் ளத வேண்டும்? சொல்லுங்கள்” என்றாள்.

“பல மார்மங்களை இது விளக்கும்.

“இந்தச் சிப்பியா?”

“ஆம் “இப்பொழுது குடித்திருக்கிறீர்களா 7”

“இல்லை.

“பின் ஏன் உளறுகிறீர்கள்?”

“உளறலா அல்லவா என்பதை ஊதியபின்பு அறிந்து கொள்வாய்.

“சரியென்று அவள் உஊதப்போனாள். “சற்று இரு” என்று அவளைத் தடை செய்த இளையபல்லவன், மஞ்சளழக! இங்கு யாருமில்லை. சொல்வதைக் கவன மாய்க்கேள். என் செய்கை ஒன்றும் இன்னும் சில நாள் களுக்கு விளங்காது. ஆனால் செய்யப்படும் எதுவும் உன் நன்மைக்காகச் செய்யப்படுகிறதென்பதை நினைவில் வைத்துக்கொள். வருகிற அமாவாசையன்று பெரு நிகழ்ச்சிகள் இந்த அக்ஷ்யமுனையில் ஏற்படும். ஆனால் அவற்றைப் பார்க்க நீ இருக்கமாட்டாய். நீ வரும்போது சிறப்புடன் வருவாய். அமாவாசை இரவில் உனக்குக் கொடுக்கப்படும் மதுவைப் பூராவாக அருந்திவிடு” என்றான்.

அவள் ஏதோ சொல்ல முயன்றாள்.

“எதுவும் விளங்காது உனக்கு. ஆனால் சொல்கிறபடி செய். இப்போது ஊது. இந்த ஊதலைக் கேட்டு வருபவரிடம் சிப்பி இந்த மரத்தடியில் கிடந்ததாகக் கூறிவிடு. சரி ஊது, நான் வருகிறேன்.” என்று கூறிவிட்டுச் சென்றான் இளையபல்லவன்.

அவன் போன சில விநாடிகளுக்கெல்லாம் அந்தச் சிப்பியை வாயில் வைத்து இரு முறை ஊதினாள் அவள். இரு முறை கோட்டான்கள் பலமாக அலறும் சத்தம் அந்த நந்தவனத்தை ஊடுருவிச் சென்றது. அந்த ஒலியைத் தொடர்ந்து திடீரென மாளிகையின் கதவொன்று பலமாகத் திறந்தது. யாரோ வேகத்துடன் ஓடிவரும் ஓசையும் மஞ்சளழகியின் செவிகளில் விழுந்தது. கடற் சிப்பியின் ரகசியம் மெள்ள மெள்ள உதயமாயிற்று அவள் சிந்தையில். “இந்த ஊதல் ஊதல். இதை ஊதினால் சாதல், சாதல் சாதல்! உண்மை தெரிந்துவிட்டது எனக்கு” என்று சொல்லிக்கொண்டே மஞ்சளழக, “வருகிறது ஆபத்து! ஆனால் அதுதான் தெரிகிறதே அவருக்கு.” என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். அவள் எதிர்பார்த்த ஆபத்து அந்தச் சமயத்தில் மாளிகைத் தோட்டத்தின் கதவை ஓசைப்படாமல் திறந்துகொண்டு அடிமேலடி வைத்து அவளிருந்த தக்கை நோக்கி வந்தது, திகிலால் அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.