அத்தியாயம் 3
பிரதிக்ஞை
அகூதா அளித்த பெரும் கொம்புகள் பயங்கர மாகவே ஊதப்பட்டதால் அகூதாவே வந்துவிட்டானென்ற எண்ணத்தாலும் அந்தப் பெரும் கொள்ளைக்காரனிடம் உள்ள அச்சத்தாலுமே அக்ஷயமுனைக் கடலோடிகளும் கோட்டை வீரரும் பதுங்கிப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கிறார்களென்ற உண்மையை விளக்கியும், வந்திருப்பது யார் என்று தெரிந்த மாத்திரத்தில் ஏற்படக்கூடிய பயங்கர விளைவை விவரித்துச் சொல்லியுங்கூட இளையபல்லவன் எதையும் லட்சியம் செய்யாமல் தன் திட்டத்தை விடாப் பிடியாகப் பிடித்துக்கொண்டதையும் மரக்கலத்தை நங்கூரம் பாய்ச்சவும், கரைக்குச் செல்லப் படகொன்றை இறக்கவும் அவன் உத்தரவிட்டதையும் கண்ட கண்டியத் தேவனும், அமீரும் பிரமிப்பின் எல்லையை மட்டுமின்றி, அவனது அளவற்ற துணிவைக் கண்டு பெரும் கலவரத்தை அடையவே செய்தார்கள். அந்தக் கலவரத்தில் ஆழ்ந்தும் விட்டதால் கண்டியத்தேவன் அடியோடு ஊமையாகி விட்டாலும் அமீர் மட்டும் கடைசி முறையாகச் சற்றுக் கடுமையாகவே எச்சரிக்கத் தொடங்க, “இளையபல்லவர் தமது திட்டத்தின் பலாபலன்களை நன்கு உணர்ந் திருக்கிறாரென்று நினைக்கிறேன்” என்றான்.
அமீர் சம்பாஷணையைத் துவங்குமுன்பே நங்கூரம் நீருக்குள் இறக்கப்பட்டதால் திடீரெனத் தேங்கிவிட்ட கப்பலின் ஆட்டத்தில் சிறிது அசைந்த இளையபல்லவன் அமீரின்மீது தன் ஈட்டி விழிகளை நாட்டிச் சொன்னான், “பூரணமாக உணர்ந்திருக்கிறேன் அமீர்” என்று.
“தட்டம் அபாயமானது” என்று வலியுறுத்தினான் மீண்டும் அமீர்.
ஆனால் அவசியமானது” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் பரவ விடாமல்.
“என்ன அவசியம் நேர்ந்திருக்கிறது இப்போது?” என்று கேட்டான் அமீர்.
இளையபல்லவன் இரு விநாடிகளில் ஏதோ யோசித்துவிட்டு, “அமீர்! இந்தக் கப்பல் நமக்கு ஏன் கொடுக்கப்பட்டது.
“அமீரின் பெருவிழிகள் நன்றாக மலர்ந்து தலைவனை ஏறெடுத்து நோக்கின. “நமக்கு என்று சொல்வது பொருந்தாது தலைவரே! தங்களுக்கு என்று சொல்வது தான் தகும். பாலித் தீவின் கிழக்குப் பகுதியை அகூதா தாக்கியபோது தாங்கள் காட்டிய அபாரத் துணிவுக்கும், போர்த்திறனுக்கும் தோல்வியுற இருந்த சந்தர்ப்பத்தை வெற்றிச் சந்தர்ப்பமாக மாற்றிய உங்கள் நுண்ணறிவுக்கும், என் குருநாதர் அளித்த பரிசு இந்தக் கப்பல். இது உங்கள் சொந்த மரக்கலம்...” என்று சொல்லிக்கொண்டு போன வனைக் கைநீட்டித் தடுத்த இளையபல்லவன், “அதைக் கேட்கவில்லை அமீர், இந்தக் கப்பலை அகூதாவிடமிருந்து எதற்கு வாங்கினேன், தெரியுமா?” என்று கேட்டான்.
“தெரியும், சொந்த நாடு செல்ல” என்றான் அமீர்.
“இல்லை, அமீர் இல்லை. சொந்த நாடு செல்ல அல்ல, சொந்த நாடு செல்ல நாம் அக்ஷயமுனைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை” என்று திட்டமாக அறிவித்தான் இளையபல்லவன்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அமீர் சிறிதும் வியப் படையவில்லையென்றாலும் கண்டியத்தேவன் மட்டும் பிரமிப்புக்குள்ளாகி, “என்ன! சொந்த நாடு செல்ல அல்லவா?” என்று வார்த்தைகளை உதிர்த்தான்.
“அல்ல”. உறுதியுடன் வந்தது இளையாபல்லவன் பதில்.
“பின் எதற்கு இந்த மரக்கலம்? ஏன் அக்ஷ்யமுனை வந்தோம்?” ஏமாற்றமும் திகிலும் நிரம்பி நின்றன கண்டியத் தேவன் கேள்வியில்,.
“நாட்டுப் பணிக்காக இந்த மரக்கலத்தைப் பெற்றேன். நாட்டுப் பணியை முன்னிட்டே இங்கு வந்தேன்” என்றான் இளையபல்லவன்.
“நாட்டுப் பணிக்கு இங்கு வருவானேன்?” என்று வினவினான் கண்டியத்தேவன்.
“இதுதான் அதற்குச் சரியான இடம்.
“கொள்ளைக்காரர் இருக்கும் இந்த அக்ஷய முனையா!”
ஆம்
“ஏன்”
“நாமும் கொள்ளையடிக்கலாம்.
“சோழர் படைத்தலைவருக்கு அந்த ஆசை வேறு இருக்கிறதா?”
“அது மட்டுமல்ல...
“அடுத்த சேவை எது?”
“எதிரிகளின் கப்பல்களைக் கொளுத்தவும் கொளுத்தலாம்.”
“ “மிகச் சிறந்த பணிதான்” என்ற கண்டியத்தேவன் குரலில் ஏளனமிருந்தது. ஆனால் அதை ஒப்புக்கொண்டு பதில் கூறிய இளையபல்லவன் குரலிலோ முகத்திலோ ஏளனமுமில்லை, இகழ்ச்சிக் குறியுமில்லை. எதிரில் பற்பல வித சிந்தனைகளுடன் நின்றிருந்த அமீரையும் கண்டியத் தேவனையும் தன் கண்களால் சில விநாடிகள் ஆராய்ந்து விட்டு, “முன்பே உங்களிருவரிடம் நான் என் குறிக் கோளைத் தெரிவித்திருக்க வேண்டும் ‘‘ என்று ஏதோ சொல்ல ஆரம்பித்துச் சற்றே தாமதித்த இளையபல்லவன், “அமீர்! தவிர யோசனைக்குப் பின்பே நான் இந்த முடிவுக்கு வந்தேன். அதுவும் நமது எதிரிகள் நிலத்தில் மட்டுமின்றி நீர்ப்பரப்பிலும் நமக்குச் சென்ற வருடத்தில் விளை வித்துள்ள அநீதிகள் அனந்தம். தென் கலிங்கத்தின் அநீதியிலும் கொடுமையிலும் தமிழர்கள் வாடுஒறார்கள். சோழ நாட்டுக் கப்பல்களுக்கும் பாலூர் பெருந்துறையில் பீமன் இடம் கொடாதது மட்டுமல்ல, கலிங்கத்தின் மரக்கலங்களைக் கொண்டு ஸ்ரீவிஜயத்தின் நீர் வழிகளிலும் தமிழர் கப்பல்களுக்குப் பெரும் இடைஞ்சல் விளைவித்து வருகிறான். அகூதாவின் கப்பலையே கடாரத்துக்கருகில் கலிங்கத்தின் மரக்கலம் ஒன்று மடக்கியதை நாம் பார்க்க வில்லையா?” என்றான்.
மெள்ள மெள்ள இளையபல்லவனின் நிலை அமீருக்குப் புரியலாயிற்று. “ஆம், ஆம். பார்த்தோம்” என்றான் பதிலுக்கு.
“கலிங்கத்தின் மரக்கலங்கள் தமிழகத்தின் இரண்டு மூன்று சிறு கப்பல்களை நாசம் செய்ததாகவும், தமிழ் மாலுமிகளைச் சிறைப் பிடித்ததாகவும் செய்தி கிடைக்க வில்லையா?” என்று மீண்டும் கேட்டான் இளைய பல்லவன்.
“ஆம். அந்தச் செய்தி பாலித் தீவில் இருக்கையில் கிடைத்தது” என்றான் கண்டியத்தேவன்.
இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை க. என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்பது மட்டுமல்ல, ராஜராஜ சோழர் காலத்திலும், ராஜேந்திர சோழ தேவர் காலத்திலுமிருந்த தமிழர்களின் கடலாதிக் கத்தை மீண்டும் நிலை நிறுத்துவதென்றும் அன்றே பிரதிக்ஞை செய்தேன். அந்தப் பிரதிக்ஞையை நிறை வேற்றவே இந்த அக்ஷ்யமுனை வந்தேன். இங்கு நமது கப்பலை நல்ல பலமுள்ளதாகச் செய்து பழுதும் பார்ப்போம். புதுப் புது விதப் போர்க்கலங்களை இதில் பொருத்து வோம்! பிறகு கடலோடுவோம்! கடலோடி, கலிங்கக் கப்பல்களை மறிப்பதற்கும், பிடிப்பதற்கும், அழிப்பதற்கும் கடலில் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அக்ஷய முனையைத் தவிர வேறு சிறந்த இடம் கிடைப்பது கஷ்டம்” என்று விளக்கவும் செய்தான் சோழர்களின் படைத் தலைவன்.
“தங்கள் திட்டத்துக்குத் தேவையான மாலுமிகள் இல்லையே” என்றான் அமீர்.
“இப்பொழுது ஐம்பது பேர் நம் மரக்கலத்தில் இருக்கிறார்கள்?” என்றான் இளையபல்லவன்.
“இன்னும் நூறு பேர் வேண்டும்” என்றான் அமீர்.
“அதோ கடற்கரைக் குடிசைகளிலிருக்கும் கொள் ளைக்காரர்களிலிருந்து பொறுக்கிக் கொள்வோம்” என்று பதில் கூறினான் இளைய பல்லவன்.
இந்தச் சமயத்தில் குறுக்கிட்ட கண்டியத்தேவன், “இளையபல்லவரே! அவர்கள் கொள்ளைக்காரர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்” என்றான் இடை மறித்து.
“இருந்தாலென்ன?” என்று வினவினான் இளைய பல்லவன்.
“கொள்ளையடிப்பார்கள்.
“கலிங்கத்தின் கப்பல்களைத்தானே?”
“ஆம். கொள்ளையில் பங்கும் கேட்பார்கள்!”
“கலிங்கத்தன் பொருளில்தானே?”
திருப்பித் இருப்பிச் சட்டென்று இளையபல்லவன் சொன்ன பதில்களைக் கேட்ட கண்டியத்தேவன் பெரும் பிரமிப்புக்குள்ளானான். பிரமிப்பின் குறி மட்டுமல்ல, பெரும் இகழ்ச்சிக் குறியும் அவன் முகத்தில் பரவலாயிற்று. “இதை வீரராஜேந்திரர் ஓப்புக்கொள்வாரா?” என்றும் வினவினான் அவன், வெறுப்பு குரலிலும் தொனிக்க. இளையபல்லவன் முகத்தில் கிலேசத்தின் சாயை லேசாக ஒரு விநாடி படர்ந்து பிறகு நீங்கியது. “வீர ராஜேந்திரர் தர்மவான். நல்லெண்ணமுள்ளவர். ஆனால் பாவம் அவர் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. கலிங்கத்துடன் சமாதானத்தை நாடி, சமாதான ஓலை கொடுத்துத்தான் என்னைப் பாலூர்ப் பெருந்துறைக்கு அனுப்பினார். ஆனால் அங்கு கிடைத்தது போர். கடற் பிராந்தியத்தில் அமைதியான வர்த்தகத்தை விரும்புகிறார். ஆனால் இங்கு நடப்பது தமிழக மரக்கலங்களின் அழிவு. இன்னும் சில நாள்கள் கலிங்கத்தின் அட்டூழியங்களை நடக்க அனுமதித்தால் ராஜராஜரும் ராஜேந்திரரும் ஏற்படுத்திய தமிழர் கடலாதிக்கம் மறைந்துவிடும். கலிங்கமும் இந்து ஸ்ரீவிஜஐயமும்தான் தலையெடுக்கும். சோழ சாம்ராஜ்யத்தைக் கண்டு நடுங்கிய இந்த இரு நாடுகளுக்கும் துணிவு அபரிமிதமாகும். அதை ஒடுக்கவே நான் திட்டமிட்டிருக்கிறேன். இன்று என் கையில் இருப்பது ஒரு கப்பல். இன்னும் சில நாள்களில் பல மரக்கலங்கள் இங்கு நம் ஆதிக்கத்தில் நிற்கும். அதற்கு அஸ்திவாரம் போடவும், அக்ஷய முனைத் தலைவனை ஆசை காட்டி நம் வலையில் இழுக்கவும் இங்கு வந்தேன். நீங்கள் கப்பலைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரமிக்கும்படியான செய்தியுடன் திரும்புகிறேன்.” என்று கூறிய இளைய பல்லவன் விடுவிடு என்று கப்பலின் மேல் தளப் படிகளி லிருந்து இறங்கத் தன் அறைக்குச் சென்று ஒரு நாழிகை கழித்துத் திரும்பி வந்தான். அப்படி வந்தவன் மிகப் படாடோபமாகப் புது உடை அணிந்திருப்பதை அமீரும் கண்டியத்தேவனும் கவனித்தார்கள். அவன் கச்சையி லிருந்து அழகிய சிறு பையொன்று தொங்கிக் கொண் டிருந்ததையும் கவனித்தார்கள். அந்தப் பையில் இருந்தது என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது மட்டுமின்றி, அதனால் பெரும் பலன் உண்டென்பதையும் அவர்கள் அறிந்தே இருந்தார்கள்.
கண்டியத்தேவனை விட அமீர் நிலைமையை வெகு திட்டமாக அறிந்திருந்தான். கொள்ளைக்காரர் சுபாவம் விசாரிக்காமல் யாரையும் ஒழித்துவிடுவது என்பதை அறிந்திருந்ததால் இளையபல்லவனின் திட்டத்தைக் கேட்கவோ சர்ச்சை செய்யவோ யாரும் தயாராயிருக்க மாட்டார்களென்பதை அவன் புரிந்து கொண்டிருந்தா னாகையால், “இளையபல்லவரே! கரைக்கு நீர் போக வேண்டாம். கோட்டைத் தலைவனோடு பேசவேண்டு மென்றால் நான் போய் வருகிறேன்” என்றான்.
“என்னைவிட நீ சிறந்தவனா?”
“உங்களைவிடக் கொள்ளைக்காரர் சுபாவத்தை நான் நன்றாக அறிந்தவன். உங்களுக்கு முன்பே நான் அகூதாவின் சீடன்.
“கொள்ளை அதிபரின் பிரதம சீடருக்கு வணக்கம். இருப்பினும் இதை நானே செய்து முடிக்க இஷ்டப் படுகிறேன். ‘“ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே நூலேணி வழியாக மரக்கலத்திலிருந்து இளையபல்லவன் படகில் இறங்கவே படகு கரையை நோக்கி விரைந்தது. அமீரும் கண்டியத்தேவனும் மரக்கலத்திலிருந்தே சுரையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
படகு கரையை அடைந்ததும் இளையபல்லவன் மிகுந்த நிதானத்துடன் கரையில் இறங்கி, சாவதானமாக மணலில் நடந்து கோட்டையை நோக்கித் தன்னந்தனியே சென்றான். தன்னந்தனியே ஒரு மனிதன் வந்ததால் பயத்தை இழந்த குடிசை மக்கள் பெரும் கூச்சலுடன் கூட்டமாக அவனை நோக்கி ஓடி வந்தார்கள். அந்தக் கணமே அவன் ஆயுள் ‘முடிந்துவிடுமென்று நினைத்துக் கப்பலில் நெஞ்சு திடுக்கிட நின்ற அமீரும் கண்டியத் தேவனும் பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார்கள். இளைய பல்லவன் ஏதோ சொன்னதைக் கேட்டதும் மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் போல் கொள்ளைக்காரர் அவனைத் தொடர்ந்து செல்வதை இருவரும் கவனித்துப் பிரமிப்புக் குள்ளானார்கள். அந்தப் பிரமிப்பு அடுத்த அரை நாழிகையில் விலகியது. அவர்கள் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. கோட்டை மதில்களிலிருந்து பறந்து வந்த பெரும் விஷ ஆம்பு இளையபல்லவன் இதயத்தில் வெகு வேகமாகப் பாய்ந்தது. அதைக்கண்ட கொள்ளைக்காரர் பெரும் கூக்குர லிட்டார்கள்.
அமீரும் கண்டியத்தேவனும் இளையபல்லவன் கதியை நினைத்து மனம் உடைந்து நின்றார்கள். கலிங்கத்தை அழிக்க அவன் செய்த பிரதிக்ஞை, அவன் ஆயுளை அத்தனை அற்ப ஆயுளாகவா அடிக்க வேண்டும் என்று ஏங்கவும் செய்தார்கள்.