அத்தியாயம் 21
அவள் அறிந்த ரகசியம்
காதல் வசப்பட்டு கலத்திலிருந்த உணவைக் கணப் பொழுது கூடக் கண்ணெடுத்துப் பாராது, கன வேகத்தில் கருத்திலே துள்ளி எழுந்து கலக்கிக் கொண்டிருந்த கணக்கற்ற எண்ண அலைகளிலும் இன்ப வேதனைகளிலும் சிக்கித் தத்தளித்துக் கொண்டும், அத்தனை தத்தளிப்பிலும் மகிழ்ச்சிச் சாயைகளை மதிவதனத்தில் படரவிட்டுக் கொண்டும் எதிரே ஆசனத்தில் சலையென அமர்ந்திருந்த மஞ்சளழகியின் மன ஓட்டங்களைச் சந்தேகத்துக்கிட மின்றிப் புரிந்துகொண்ட பலவர்மன் இதயத்தில், ஆரம் பத்தில் சிறிது கோபம் துளிர்த்ததானாலும் இறுதியில் உதயமான புதியதொரு யோசனை அந்தக் கோபத்தை அறவே அறுத்துவிட்டதால் அவன் பெரும் மனச் சாந்தி யையே அடைந்தான். தன் யோசனையில் உருவெடுத்த திட்டம் மட்டும் பலித்துவிட்டால், அந்த இரவு நிகழ்ச்சி யால் விளைந்துவிட்ட எல்லையில்லாத் தொல்லை களனைத்துக்கும் பரிகாரத்தை நிச்சயமாய்க் காணலாம் என்ற உறுதி ஏற்பட்டதால், இளைய பல்லவனைச் சந்தித்ததிலிருந்து அந்த வினாடிவரை அ(வனுக்கிருந்த மனப் போராட்டங்கள் மறைந்ததன்றி, அவை மறைந்து விட்டதற்கு அடையாளமாக அவன் முகத்திலும் சாந்தியின் சாயை வெகு துரிதமாகப் படர்ந்தது. அன்றைய காலையில் இளையபல்லவன் வந்துவிட்டுப் போனபோதே மஞ்சளழகி யின் மனநிலையில் திடீரென ஏதோ மாறுதல் ஏற்பட்டு விட்டதைக் கண்ட அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் அது காதலாயிருக்க முடியாது என்றே முதலில் எண்ணினான். கண்டதும் காதல் என்பது கற்பனை நாடகங்களிலும் கட்டுக் கதைகளிலும் தான் ஏற்படுமே தவிர, வாழ்க்கையின் அனுபவத்தில் அத்தகைய திடீர் அன்புக்கு இடமில்லையென்றே நினைத்த கோட்டைத் தலைவன், மஞ்சளழகியின் மன அலைச்சலுக்குக் காரணம் புதியதொரு நாகரிக மனிதனைக் கண்டதேயொழிய வேறு இல்லையெனத் தீர்மானித்திருந்தான். அக்ஷயமுனைக் கோட்டையின் சாதாரணப் பிரஜைகளையும், பதக் முதலிய நாகரிகப் பூர்வகுடிகளையும், அத்தனை அநாகரிகமில்லா விட்டாலும் குடியாலும் குரோதத்தாலும் நிதானமற்ற வாழ்க்கையாலும் கண்ணியமிழந்து கடந்த கொள்ளைக் கூட்டத்தையுமே பார்த்திருந்த தன் மகளுக்கு அரச தோரணையும் நாகரிகப் போக்கும் கம்பீரமும் உடைய இளையபல்லவன் ஒரு புது மனிதனாகத் தோற்றமளித் தருக்க வேண்டுமென்றும், தவிர அவனைப் பற்றி ஏற்கெனவே சொர்ணபூமியில் பரவிவிட்ட புகழும், அவ ளுடைய மனத்தில் ஓரளவு கவர்ச்சியை உண்டு பண்ணி யிருக்க வேண்டுமென்றும் பலவர்மன் ஆரம்பத்தில் எண்ணினாலும், அன்றையப் பொழுது போகப் போக அவனுக்குத் தான் நினைத்தது சரியா என்பதில் பெரும் சந்தேகம் தோன்றத் துவங்கியது. தான் எதைச் சொன்னா லும் வெடுக் வெடுக்கென்று பதில் சொல்லும் சுபாவம் வாய்ந்த தன் மகள் அன்றையப் பகல் முழுவதும் பெரும் மெளனம் சாதித்ததையும், அவள் சதா ஏதோ யோசனை யில் ஆழ்ந்து இடந்ததையும், தான் ஏதாவது கேட்ட போதெல்லாம் கனவிலிருந்து மீண்டவள் போல், “என்ன, என்ன கேட்டீர்கள்?” என்று இரண்டாம் முறை தன் கேள்வியைத் திருப்பிச் சொன்னதையும் கண்டதும் சந்தேகம் மட்டுமின்றி ஒரளவு கோபமும் அவன் இதயத்தில் துளிர்க்கலாயிற்று. தான் கேள்வி கேட்டபோதெல்லாம் அவள் சரியாகப் பதில் சொல்லாதது மட்டுமல்லாமல், சில சமயங்களில் அவளாகவே பேசத் தொடங்க, “ஏனப்பா! இரவு நிகழ்ச்சிக்கு அவர் வந்தால் அவருக்கு ஏதாவது ஆபத்து விளையுமென்று எதிர்பார்க்கிறீர்களா?” என்றும், “அந்த நால்வரும் கலவரத்தைத் துவக்கினால் நமது காவலர் தடுக்க முடியாதா?” என்றும் ஏதேதோ கேள்விகளை அவள் அன்றைய பகலில் பலமுறை கேட்டுவிட்டதையும், அக் கேள்விகளை அவள் வீசிய சமயங்களில் அவளது மங்கள முகத்தில் கவலைக்குறி வெகுவாகப் படர்ந்து கடந்ததையும் கவனித்த கோட்டைக் காவலனான பலவர்மன், “சில நாழிகைகளே சந்தித்த அந்த வாலிபன் மீது எத்தனை அக்கறை காட்டுகிறாள் இவள்?” என்று எண்ணிக் கோபம் கொண்டானானாலும், “இந்தப் புது மோகம் சிக்கிரம் பறந்துவிடும், நிலையற்றது’ என்று தீர்மானித்துத் தன்னைச் சற்றே நிதானப்படுத்திக் கொண்டான்.
ஆனால் அந்த முடிவு எத்தனை தவறு என்பதைக் கடற்கரையில் நடந்த நிகழ்ச்சிகளால் சந்தேகமறப் புரிந்து கொண்ட பலவர்மன் பெரும் திகைப்புக்குள்ளானான். மனிதர்களுடைய மனப் போக்கை எடைபோடுவதில் நிகரற்றவனாக அக்ஷ்யமுனைக் கோட்டைக் காவலன், நடனத்தின்போது பலமுறை பல திசைகளில் அசைந்த மஞ்சளழகியின் அழகிய விழிகள், திரும்பத் திரும்ப ஆசையுடன் தன் காலடியில் அமர்ந்திருந்த இளைய பல்லவன் மீதே பதிந்ததையும், அவள் கரங்களும் திரும்பத் திரும்ப அவனை நோக்கியே நீண்டதும், தன் மகளின் மனம் இளையபல்லவனிடம் அடியோடு லயித்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டான். நடனத்தின் முடிவில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் அந்த உணர்வுக்குப் பெரும் ஆதாரத்தை அளித்தன. வில்வலன் இளையபல்லவனை வாள்போருக்கு அழைத்தபோது மஞ்சளழகியின் கண் களில் திகில் மண்டியதையும், வில்வலன் வாள் ஆகா யத்தில், பறந்தபோது அவள் முகத்தில் மகிழ்ச்சியும் பெரு மிதமும் தாண்டவமாடியதையும், இளையபல்லவன் அவள் இடையைத் தொட்டுத் தூக்கிப் புரவியில் அமர்த்திய பின்பும் இரண்டு விநாடிகளுக்கு அவள் புரவியை நடத்தாமலே இருந்ததையும் பார்த்த பலவர்மன் விஷயம் தான் நினைத்ததைவிடப் பன்மடங்கு முற்றி விட்டதை அறிந்துகொண்டான். அந்த அறிவினால் கற்பனைக் கதைகளிலும் உண்மை நிரம்ப இருக்கிறது என்ற எண்ண மும் அவன் சித்தத்தில் எழுந்தது. உணர்ச்சியில் இருந்து தான் கற்பனையும் விளைகிறது, கதையும் விளைகிறது என்ற உண்மையும் அவன் உள்ளத்தில் அன்றிரவு ஊறவே, கண்டதும் காதல் சாத்தியம்தான் என்ற முடிவுக்கும் அவன் வந்தான். அந்தக் காதல் தன் மகளை நன்றாக வளைத்துக் கொண்டுவிட்டதையும், அதன் விளைவாகவே அவள் உணவைத் தொடாமல் உட்கார்ந்திருக்கிறாள் என்பதையும் உணர்ந்துகொண்டான் பலவர்மன். செவிக்குணவு இல்லாத போதுதான் சிறிது வயிற்றுக்குத் தேவை என்பது வள்ளுவர் முடிவு. ஆனால் காதலே மனத்துக்குப் பெரும் உணவு. அது இருக்கும் போது மற்ற உணவு மாந்தருக்குத் தேவையில்லை என்பதை அன்று மஞ்சளழகி அறிந்து கொண்டாள். அந்தக் கருத்து எத்தனை உண்மை என்பது பலவர்வனுக்கும் நன்றாகப் புரிந்தது.
அப்படிப் புரிந்ததால் முதலில் சற்று கோபத்தின் வசப்பட்ட பலவர்மன், தன் மகள் திடீரெனக் காதல் வசப்பட்டதற்குத் தானும் ஒரு காரணம் என்று எண்ணிய தால் குற்றத்தை அவள்மீது மட்டும் சுமத்த முடியா தென்பதையும், அது குற்றமானால் அதில் தனக்கும் பங்கு உண்டென்பதையும் தீர்மானித்துக் கொண்டதால் அவன் சில வினாடிகள் ஆத்ம சோதனையில் இறங்கினான். பருவ எழில்கள் பூத்துக் குலுங்க எதிரே உட்கார்ந்திருந்த தன் மகளை வயது வந்த பெண் என்ற முறையில் அன்றே எண்ணமிட்டு நோக்கிய பலவர்மன், அன்றுவரை அவள் இருமணத்தைப் பற்றித் தான் இனையளவும் ௫ந் இத்த தல்லையென்பதையும் நினைத்துப் பார்த்தான். சதா சர்வ காலமும் அரசியல் விவகாரங்களில் சிக்க, கொள்ளையர் களைப் பிரித்து வைப்பதிலும், வேண்டாதவர்களைத் தீர்த்துக் கட்டுவதிலும், பூர்வகுடிகளைத் திருப்தி செய்து அக்ஷயமூனையில் தனது ஆட்சியைத் திடப்படுத்திக் கொள் வதிலுமே தான் புத்தியைச் செலவிட்டு வந்ததையும், தன் இல்லத்தில் தன்னிடம் வயது வந்த பெண் வளர்ந்து பருவத்தை எட்டியதைத் தான் அடியோடு அசட்டை செய்து வந்ததையும் நினைத்துப் பார்த்த பலவர்மன், மகளுக்குத் தான் செய்த பெரும் அநீதியை நினைத்துப் பார்த்தான். சொர்ணபூமித் தலைநகரான ஸ்ரீவிஜயத்துக்குத் தான் சென்ற சமயங்களில்கூட அவளை அழைத்துச் சென்று நாகரிக சமூகத்தைக் காட்ட முயலாமல் அக்ஷய மூனையில் தோழிகளிடமும் செவிலித் தாயிடமுமே விட்டுப் போனதையும் அவளுக்குப் பழக்கமெல்லாம் கொள்ளைக்காரர்களிடமே யென்பதையும் எண்ணிப் பார்த்த பலவர்மன் நாகரிகம் கொழிக்கும் ஸ்ரீவிஐயத்தை எட்டிப் பார்க்காத அந்தக் காட்டுப் புஷ்பத்தை பிறநாட்டு வீரனொருவன், அதுவும் தான் அறவே வெறுக்கும் தமிழர் களின் தலைவனொருவன் பறிக்க வந்து, அவன் கையை நோக்கி அந்தப் புஷ்பம் சாய்கிறதென்றால் அதற்குக் காரணம், தான் வளர்த்த முறையே என்ற முடிவுக்கும் வந்தான்.
இப்படி விஷயங்களை நினைக்க நினைக்க ஏற்பட்ட விளைவை எண்ணிப் பார்க்க பார்க்க, பலவர்மனுக்கு மஞ்சளழகியின் காதலில் அதிகத் தவறு எதுவும் இருப்ப தாகப் புலப்படவில்லை. மகாவீரனொருவனை, உயர்குடி மகனொருவனை மஞ்சளழகி விரும்புவதிலோ, வதுவை செய்துகொள்வதிலோ தவறு ஏதுமில்லை என்றே தீர்மானித்தான் அவன். ஆனால் மஞ்சளழகிக்கு இருக்கும் பெரும் காதல் இளைய பல்லவனுக்கும் இருக்குமா என்பது மட்டும் பெரும் சந்தேகம் முளைத்தது பலவர்மன் இதயத்தில். நடன நிகழ்ச்சியின்போது இளையபல்லவன் சற்று நிதானத்தை இழந்து மேடையை நோக்கி விரைந் தானானாலும் அதற்குக் காரணம் அழ்ந்த காதல் என்று கூற முடியாதென்றே பலவர்மன் நினைத்தான். அன்றைய காலையில் முதன்முதலாக மஞ்சளழகியைச் சந்தித்த சமயத்தில் அவள் அழகைப் பார்த்து இளையபல்லவன் மலைத்தானானாலும், அவன் நினைப்பெல்லாம் தன் உதவியைப் பெறுவதிலேயே இருந்ததையும் தனக்கு ஏதாவது தீங்கு நேரிட்டால் அகூதா வாங்கக்கூடிய பழியைச் சுட்டிக்காட்டி மிரட்டியதையும் நினைத்துப் பார்த்த பலவர்மன், மஞ்சளழகியைக் கண்ட பிறகும் மனவலிமையை இழக்காதவன் அத்தனை எளிதில் அவளிடம் இதயத்தைப் பறிகொடுத்து மஞ்சளழகியை மணம் செய்துகொள்வதானால் இளையபல்லவனை விடச் சிறந்த மணாளனைத் தான் தன் மகளுக்குத் தேடிக் கண்டு பிடிக்க முடியாதென்று தீர்மானித்த பலவர்மன், அப்படி இளையபல்லவனை மட்டும் தன் மகளுக்கு மணாளனாக்க முடியுமானால் அக்ஷயமுனைக் கோட்டையில் தன் பலமும் செல்வாக்கும் பன்மடங்கு உயர்ந்துவிடும் என்று எண்ணினான். இளையபல்லவனின் போர்த்திறனும் நிதானமும், அகூதாவிடம் அவனுக்குள்ள செல்வாக்கும், பூர்வகுடிகளின் கொட்டத்தை அடியோடு அடக்க முடியு மென்பதில் பலவர்மனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. “தவிர இளையபல்லவனுக்கே கோட்டையைக் காக்கும் பொறுப்பையும் கொடுத்து விட்டால் அவன் ஸ்ரீவிஜயத்தின் படைத் தலைவர்களில் ஒருவனாகி விடுவான். அதனால் ஸ்ரீவிஜயம் பலப்படும், சோழர்களை எதிர்க்க நாம் ஒரு கோடரியையும் தயார் செய்தது போலாகும்.” என்று வஞ்சக எண்ணங்களை உருவாக்கிக் கொண்ட பலவர்மன் அந்த எண்ணங்களை எப்படிச் செயல்படுத்தலாம் என்ற சிந்தனையில் சில நிமிஷங்கள் செலவிட்டான். திருமண யோசனையைத் திடீரென இளையபல்லவனிடம் வெளி யிடுவது முட்டாள் தனமென்பதையும், மிகுந்த எச்சரிக்கை யுடன் அவனைப் படிப்படியாகத் தனது வலையில் வளைக்க வேண்டுமென்பதையும் தீர்மானித்துக் கொண்ட பலவர்மன் தன் திட்டத்துக்கு மகளின் துணை தேட முயன்றான். ஆகவே மெள்ளத் தன் ஆசனத்திலிருந்து எழுந்து இடையே இகுந்த மஞ்சத்தைச் சுற்றிச் சென்று ஆசனத்தின் பின்புறம் நின்று கொண்டு அவள் தலையை மெள்ள வருடிக்கொண்டே “குழந்தாய்! இல்லை, இல்லை, மஞ்சளழக!” என்று அன்புடன் அழைத்தான்.
அவள் அதற்கு உடனே பதில் ஏதும் சொல்லவில்லை. சில விநாடிகள் மெளனம் சாதித்துவிட்டுப் பிறகு மெள்ள நகைத்தாள். “ஏன் நகைக்கிறாய்?” என்று வினவினான் பலவர்மன்.
மஞ்சளழக குனிந்த தலை நிமிராமலே கேட்டாள், “என்ன? புதுப் பெயர் வைத்து அழைக்கிறீர்களே?” என்று.
“புதிய பெயராயிருந்தாலும் பொருத்தமான பெயர் தானே?” என்று மெள்ள அன்புடன் சொற்களை அதிர்த்தன அவன் உதடுகள்.
“உங்களுக்கும் அந்தப் பெயர் பிடித்திருக்கிறதா?” என்று வினவினாள் அவள். அதைக் கேட்டபோது அவள் குரலுக்கிருந்த குழைவைக் கவனித்தான் பலவர்மன். உங்களுக்கும் என்று அவள் ஒரு ‘உம் ‘மையும் சேர்த்ததன் பொருளும் அவனுக்குத் தெள்ளெனப் புரிந்தது. இளைய பல்லவனுக்கு அந்தப் பெயர் பிடித்திருப்பதை அவள் அந்த “உம் ‘மில் குழைத்துக் காட்டுகிறாளென்பதை அவன் உணரத் தவறவில்லை. ஆகவே சற்றுப் புன்முறுவல் கொண்டு, “ஆம், எனக்கும் பிடித்திருக்கிறது.” என்று சொல்லி “உம் ‘மை அவனும் அழுத்தி உச்சரித்தான்.
“ஏன், ‘உம் ‘மை அப்படி அழுத்திச் சொல்கிறீர்கள்?” என்று அவள் கேட்டாள். சற்று சங்கடத்துடன்.
“இரண்டு பேருக்கும் அந்தப் பெயர் பிடித்தமா யிருப்பதால்.” என்று பலவர்மன் லேசாக நகைத்தான்.
அந்த நகைப்பு அவளுக்குப் பெரும் சங்கடத்தை விளைவித்தது.
தன் இதயத்தைத் தந்தை புரிந்துகொண்டு விட்டார் என்ற பயமும் அவள் புத்தியில் உருவெடுத்தது. ஆகவே “இரண்டு பேரா!” என்று ஏதோ கேட்க வேண்டு மென்பதற்காகக் கேட்டாள்.
“ஆம், இரண்டு பேர்தான்.” என்றான் பலவர்மன் புன்முறுவலுடன்.
“யார் அந்த இரண்டு பேர்?”
“அவரும் நானும், “
“அவர் என்பது யார்?”
“உனக்கு வேண்டியவர்.
“யார் எனக்கு வேண்டியவர்?”
“மன்னர்.
“ஸ்ரீ விஜய சாம்ராஜ்ய மன்னரா?”
“இல்லை, இல்லை.
“வேறு மன்னர் ஏது?”
“உன் மன சாம்ராஜ்யத்தின் மன்னர்.
“இதைச் சொன்னதும் சற்றுப் பலக்கவே சிரித்தான் பலவர்மன்.. அவன் பேச்சின் போக்கையும் முடிவில் ஏற்பட்ட சிரிப்பையும் சிறிதும் ரசிக்காத மஞ்சளழகி, தனது தோளில் பதிந்து கிடந்த தன் தந்தையின் கையைத் தனது இடது கையால் பிடித்து உதறித் தள்ளியதன்றி, தலையைத் இடீரென நிமிர்த்தி ஆசனத்தைவிட்டுச் சரேலென எழுந்து பலவர்மனை நோக்கித் திரும்பினாள். அவள் முகத்தில் வெட்கமும் கோபமும் கலந்து தாண்டவமாடினாலும் வெட்கத்தைவிடக் கோபமே மேலெழுந்து நின்றதால் அவள் செவ்வரிக் கண்கள் அதிகமாகச் சிவந்து அக்ஷ்ய முனைக் கோட்டைத் தலைவன் மீது கனலைக் கக்கின. எழுந்து திரும்பிய அவள் தனது அசனத்தின் முகப்பைக் கைகளால் பிடித்துக் கொண்டும், பின்பக்கம் உணவுக் கலங்கள் வைக்கப்பட்டிருந்த ஆசனத்தின் முகப்பில் சற்றே வளைந்து சாய்ந்து கொண்டும் குற்றவாளியை விசாரிக்க முயலும் பெரிய ராணிபோல் பலவர்மனைச் சுடும் விழிகளால் நோக்கியதன்றி, “என்ன சொன்னீர்கள்?” என்று சீற்றத்துடன் கேட்கவும் செய்தாள்.
அவள் சீற்றத்துக்குக் காரணம், தான் உண்மையை உணர்ந்துகொண்டு விட்டதேயொழிய வேறில்லை யென்பதை அறிந்து கொண்டாலும், தன் ஏற்பாடு பயனுற வேண்டுமானால் தான் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்ட பலவர்மன், தனது சிரிப்பைச் சட்டென்று அடக்கிக் கொண்டு அந்தச் சீறும் விழிகளின் மீது அன்பெல்லாம் அள்ளிக் கொட்டிய பார்வையொன்றை வீசினான். அதைத் தொடர்ந்து உதிர்ந்த அவன் வார்த்தைகளிலும் அன்பு பூரணமாகத் தொனித்தது. “தவறாக ஏதும் சொல்லவில்லை, மகளே! உன் உள்ளத்தில் உள்ளதைத்தானே சொன்னேன்?” என்றான் பலவர்மன் அன்பு ததும்பும் குரலில்.
அவனது அன்பான பார்வை, பார்வையைத் தொடர்ந்து வெளிப் போந்த சொற்கள், சொற்களைத் தழுவிய மதுரமான குரல், இவற்றின் விளைவாகச் சிற்றநத்தை ஓரளவு தணித்துக்கொண்ட மஞ்சளழக, வெறுப்பும் இகழ்ச்சியும் மண்டிய குரலில் கேட்டாள், “என் உள்ளத்தையும் அத்தனை எளிதில் புரிந்தகொண்டு விட்டீர்களாக்கும்?” என்று.
“ஆம்.” சர்வ சாதாரணமாகப் பதிலிறுத்தான் பலவர்மன்.
“பெண் உள்ளத்தைப் புரிந்துகொள்வது மிகக் கடினம் என்பது அன்றோர் கருத்து.” என்று சுட்டிக் காட்டினாள் அவள்.
“அதற்கு விலக்கு மூன்று பேர்.” என்றான் பலவர்மன்.
“யார் அந்த மூன்று போர்?”
“தாய், காதலன், தோழி.
“அந்த மூவரில் நீங்கள் யாருமில்லை.
“இல்லைதான். ஆனால் தாயின் பதவியை வஒத்திருக் கிறேன். நீ என் கரங்களில் வளர்ந்தவள், தரையில் நீந்தி, தவழ்ந்து, தளர்நடை புரிந்ததிலிருந்து இன்றுவரை என் கவனத்திலிருந்து நீ விலகவில்லை.
“இந்த வார்த்தைகளைப் பலவர்மன் சொன்னபோது அவன் நா தழுதழுத்தது. குரல்கூடச் சற்றுக் கம்மியது. அப்படி அவன் தன் விஷயத்தில் உணர்ச்சிக்கு இடங் கொடுத்ததை அவள் அன்றுவரை பார்த்ததில்லை. அன்று நடந்த எல்லாமே புதிதாயிருந்தது அவளுக்கு. எதற்கும் உணர்ச்சி வசப்படாத தந்தை உணர்ச்சி வசப்பட்டது அவளுக்குப் புதிதாயிருந்தது. வேடிக்கைக்குக்கூட விகல்ப மாகப் பேசாத பலவர்மன், தன்னையும் இளைய பல்லவனையும் இணைத்துப் பேசியதன்றி, “உன் மனச் சாம்ராஜ்யத்தின் மன்னர்.” என்று இளையபல்லவனைச் சுட்டிக்காட்டியதும் பெரும் வினோதமாகயிருந்தது மஞ்சளழகிக்கு. எந்தக் காரணத்தால் தந்தை அப்படித் துடீரென்று மாறிவிட்டார் என்று திகைத்தாள் அவள். ஒரு தந்தை நேரிடையாகத் தனது மகளிடம் விவாதிக்கத் தகாத விஷயங்களைத் தனது தந்தை அவ்வாறு விவாதித்ததும் பெரும் விசித்துிரமாயிருந்தது அவளுக்கு. இத்தகைய மாற்றத்துக்குக் காரணம் புரியாததால் அவள் சற்றே தலையைக் குனிந்துகொண்டு சில விநாடிகள் ஏதோ யோசித்தாள். பிறகு தலை குனிந்த வண்ணமே பேசவும் முற்பட்டு, “தந்தையே!” என்று அழைக்கவும் செய்தாள்.
“ஏன் மகளே?” என்று அன்புடன் வினவினான் பலவா்மன்.
“இன்று உங்கள் போக்கு புதுவிதமாயிருக்கிறது.
“ஆம்.
“ஏதேதோ பேசுகிறீர்கள்.
“ஆம்.
“ஒரு தந்தை மகளிடம் பேசக்கூடாத விஷயங்களைப் பேசுகிறீர்கள்.
“உண்மைதான்.
“ஏன் பேசுகிறீர்கள் அப்படி?” சீற்றமெல்லாம் குரலிலிருந்து பறக்க, வருத்தமும் வெட்கமும் குரலில் தோய்ந்து நிற்கக் கேட்டாள் மஞ்சளழக.
பலவர்மனிடமிருந்து உடனே பதில் வரவில்லை. “இதோ பார் மஞ்சளழக.” என்று சில விநாடிகள் கழித்து வந்த பதிலில் அதுவரை கேட்காத புதுத் தொனி இருந்தது. மஞ்சளழகி தன் அழகிய விழிகளை ஏறெடுத்துப் பலவர் மனை நோக்கினாள். அவன் கண்களில் ஏதோ புத்தொளி யொன்று படர்ந்து நின்றது. முகம் விவரிக்க இயலாத உறுதியைப் பூண்டிருந்தது. அவன் அடுத்துச் சொன்ன வார்த்தைகளும் உறுதியுடனும் திடத்துடனும் வெளி வந்தன. அவன் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் அவள் இதயத்தில் பெரும் இடிகளாகத் திடீர் திடீரென விழுந்தன. அதுவரை அறியாத பெரும் ரகசியமொன்றை அன்று அவள் அறிந்துகொண்டாள். அந்த அறிவு பெற்றதால் அவள் தலை சுழன்றது. அசனத்தைப் பிடித்திருந்த கைகள் செயலற்றுப் போயின. உடலும் துவண்டது. மயக்கமுற்று விழும் நிலைக்கு அவள் வந்துவிட்டாள்.