அத்தியாயம் - 20

காதலுக்குப் பொய்யும் தேவை

மரக்கலத்தின் அறையில் மரக்கட்டிலில் மாலுமி யொருவன் விரித்துவிட்டுச் சென்ற பஞ்சணையில் படுத்துக் கடந்த மாவீரனான இளையபல்லவன் மதியில், மரக்கலத் தின் அடியிலிருந்த ஆழ்கடலின் அலைகளைப் போலவே ஏதேதோ எண்ணங்கள் உருவெடுத்து எழுந்து எழுந்து உருண்டு புரண்டு மோதி மடிந்து கொண்டிருந்தன. இரண்டே சித்ரா பெளர்ணமிகளுக்குள் தனது வாழ்க்கை யில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டி ருக்கின்றன என்பதை மட்டுமின்றி அந்த இரண்டு சித்ரா பெளர்ணமி நாள்களும் எத்தனை வித்தியாசமானவை என்பதையும் எண்ணிப் பார்த்தான் அவன். ஒரு வருடத்துக்கு முன்பு சித்ரா பெளர்ணமி தினத்தில் சோழப் பேரரசின் சமாதானத் தூதனாகவும் கெளரவமான படைத் தலைவனாகவும் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் தான் இறங்கிய தையும், சரியாக ஒரு வருடம் ஓடிவிட்ட இந்தச் சித்ரா பெளர்ணமியில் கேட்பவரெல்லாம் பயந்து நடுங்கும் சீனக் கொள்ளைக்காரனொருவனின் உப தலைவனாகவும் எந்தக் கலிங்கத்துடன் சமாதானத்தை நாடி ஓலை எடுத்துச் சென்றானோ அந்தக் கலிங்கத்தின் கடலாதிக்கத்தை ஒடுக்கப் பழி வாங்கும் எண்ணத்துடன் கொள்ளையரும், அநாகரிக மக்களும் கொலைகாரக் கோட்டைத் தலை வனும் கொண்ட அக்ஷயமுனையில் தானும் ஒரு கொள்ளைக்காரனாகப் பரிமளிக்கும் தீர்மானத்துடன் வந்து, மரக்கலத்தை நங்கூரம் பாய்ச்சி இருப்பதையும் நினைத்து, விதி மனிதனை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்று நினைத்துப் பெருமூச்சும் விட்டான்.

இந்த இரண்டு சித்ரா பெளர்ணமிகளில் தனது வாழ்க்கையில் வித்தியாசங்கள் பல இருந்தாலும் ஒற்றுமை ஆம்சங்களும் சில இருப்பதைக் கண்டான் சோழர் படைத் தலைவன். பாலூர்ப் பெருந்துறையில் கால்வைத்த நிமி டத்திலிருந்து அந்தச் சித்ரா பெளர்ணமியிலும் தனக்குச் சண்டையும் சச்சரவும் வாளுக்கு வேலையும் இருந்ததென் பதையும், இந்தச் சித்ரா பெளர்ணமியிலும் அந்தத் தொதந்தரவுகளுக்குக் குறைவில்லையென்பதையும், இரண்டு சித்ரா பெளார்ணமிகளிலும் இரண்டு சித்தினிப் பெண்க ளிடம் தன் சித்தத்தைப் பறிகொடுக்கும்படியான நிலை ஏற்பட்டுவிட்டதையும் எண்ணிப் பார்த்த இளைய பல்லவன் தனக்கு பெரும் மன உறுதியும் நிதானமும் இருப்பதாகச் சோழ நாட்டில் தனது வீரரும் தற்சமயம் தனது மாலுமிகளும் கொண்டாடுவதில் பொருளிருக்கிறதா என்ற சந்தேகத்துக்கும் உள்ளானான். பெண்களைப் பார்த்ததும் மயங்கிவிடும் அத்தனை பஞ்சை மனம் படைத்தவன் தானல்ல என்பதை இளையபல்லவன் உணர்ந்தே இருந்தான். தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இரு மாதரும் இருவிதப்பட்ட தோற்றத்தையும் அழகையும் கொண்டவர்களாயிருந்தாலும் அந்த இருவித அழகிலும் பெரும் தூய்மையும் காந்த சக்தியும் இருந்ததை அவன் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தான். ‘இரு அழகிகளில் காஞ்சனாதேவி வாள் பயிற்சியுள்ள வீரப் பெண். அவள் முகத்திலும் நடையிலும் வீரம் மிகுந்த எழிலே சுடர் விட்டது. இவளோ நெஞ்சுரமிருந்தாலும் ஆயுதப் பயிற்சியற்றவள், ஆனால் இவள் கலைப் பயிற்சி வாரி வீசும் ஆயிரமாயிரம் காந்தக் கணைகளின் சக்தி இணையற்றது” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். பாலூர்ப் பெருந்துறையில் மாடியறையில் கனல் வீசும் கண்களைத் தன் மீது பாய்ச்சி வாள் முனையில் தன்னை வரவேற்று, விநாடியில் தன் வாளைக் கையிலிருந்து விசிறியோடும் வண்ணம் வாளைச் சுழற்றிய காஞ்சனா தேவியையும், கொள்ளையர் மத்தியில் அச்சமின்றி உலாவுபவளும், பசுமஞ்சள் நிறத்தைப் பெற்றதால் மாலை நேரப் பூம்பாவை போல் தென்படுபவளும், காலசைவு கண்ணசைவு, இடையசைவு, இவற்றின் கலை அசைவுகளாலேயே தன்னைப் பலர் முன்னிலையில் பைத்தியம் பிடித்து நடன மண்டபத்தை நோக்கி ஓட வைத்தவளுமான மஞ்சளழகி யையும், பலமுறை திரும்பத் திரும்ப ஒப்பிட்டுப் பார்த்தும் இரு பெண்களில் எவள் சிறந்தவள் என்பதை நிர்ண யிக்கமாட்டாமல் திணறினான் அவன்.

அந்த இரண்டு பெண்கள் சித்தத்தில் சுழன்ற நேரத்தில் அழகு மயக்கத்தின் வசப்பட்ட சோழர் படைத் தலைவன் அவர்கள் தன்மீது கட்டிவிட்ட கடமைகளும் பொறுப்புகளும் எத்தன்மையவை என்பதையும் நினைத்துப் பார்த்தான். ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணையில் தந்தையை அமர்த்த சோழர் பேரரசின் உதவி நாடிவந்த காஞ்சனாதேவியின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்வது சோழர் படைத்தலைவன் என்ற முறையில் தனது பொறுப்பு என்பதையும், மஞ்சளழகயின் கெஞ்சலையும் மீறி இரவு நிகழ்ச்சிக்கு வந்து அவள் தந்தைக்கும் கோட்டை மக்களுக்கும் பூர்வகுடித் தலைவர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொடுத்ததால் ஏற்படக்கூடிய பயங்கர விளைவுகளிலிருந்து மஞ்சளழகியையும், அவளைச் சேர்ந்தவர்களையும் காப்பது தனது கடமையென்பதையும் அவன் உணர்ந்துகொண்டான். இப்படிப் பல பொறுப் புகள், அளவுக்கதிகமான பொறுப்புகள், போர் செய்” என மன்னன் புகன்றால் படைகளை நடத்தும் பொறுப்பை மெல்ல. வழா மட்டுமே ஏற்க வேண்டிய படைத்தலைவனுக்கு அனாவசியமான பல பொறுப்புகள், தன்மீது சுமந்து விட்டதை அவன் எண்ணினான். இத்தனை பொறுப்பு களையும் தன்மீது சுமத்திவிட்டவர்கள் இரண்டு பெண்கள் என்பதை எண்ணிப் படுத்துக் கடந்த அந்த ஏகாந்த நிலையிலும் தனக்குத் தானே ‘களுக் ‘கென்று சிரித்துக் கொண்டான். சோழப் பேரரசோ, ஸ்ரீவிஜய சாம்ராஜ்யமோ இத்தனை பொறுப்புகளைத் தன்மீது சுமத்தவில்லை யென்பதையும், இத்தனை சாம்ராஜ்யங்கள் சாதிக்காததை இரண்டு பெண்கள் சாதித்துவிட்டதையும் நினைத்துப் புருஷனுடைய பலவீனம் எத்தனை கேவலமானது என்று எண்ணிப் புன்முறுவலும் கொண்டான்.

அமீர், கண்டியத்தேவன் இருவர் உதவியால் அகூதா வின் மரக்கலத்தில் தப்பிய தான் மட்டும் இஷ்டப் பட்டிருந்தால், அகூதா தன்னை ஏதாவதொரு வணிக மரக்கலத்தில் புகாருக்கு அனுப்பி இருப்பானென்பதையும், தானே வேண்டுமென்று கடற்படைப் பயிற்சி பெற அசைப்பட்டு அவனுடன் ஒரு வருட காலம் கழித்ததையும் யோசித்துப் பார்த்து, “இதற்கு மூலகாரணம் என்ன? என்பதையும் ஆராய்ந்தான். கடற்படைப் பயிற்சி பெற்றதற்குக் காரணம் கலிங்கத்தின் கடலாதிக்கத்தை உடைக்கும் ஆசைதான். அதற்கு வித்து விதைத்தது தமிழர்களைக் கலிங்கத்துப் பீமன் படுத்திய கொடுமையும், சோழர்களின் சமாதான கரத்தை அவன் ஏற்க மறுத்ததும் தான். ஆனால் அதற்கெல்லாம் கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு சோழ மன்னரையும் அமைச்சர் குழுவையும் சேர்ந்ததல்லவா? அவர்கள் வகுக்கும் கொள்கைகளை நிறைவேற்றுவதுதானே படைத்தலைவன் பொறுப்பு? ‘ என்று தனக்குள் கேள்விகளை எழுப்பிக்கொண்ட படைத் தலைவன், தன் போக்குக்கு வித்து விதைத்தது பீமனுடைய கொடுமையானாலும் அந்த வித்தைத் தாங்கி நின்றது காஞ்சனா என்ற கன்னியே என்ற முடிவுக்கும் வந்தான். முடிவை உள்ளம் ஒப்பவில்லை. ஒப்புவது அதற்குத் தர்ம சங்கடம். ஒப்பவில்லையானாலும் உண்மை அதுதானே!

அதுதான் போகட்டும்! அக்ஷ்யமுனைக்கு வந்த நான் இதைத் தளமாக்கிக் கொள்ளவும், மரக்கலத்தைச் செப்ப னிட்டுக் கொள்ளவுமே வந்தேன். அதற்குப் பூர்வாங்கமாகக் கடற்கரைக் கொள்ளைக் கூட்டத்தை மித்ரபேதம் செய்தேன். கோட்டைத்தலைவன் உதவியை அவன் இஷ்டத்தடனோ இஷ்டவிரோதமாகவோ பெறத் தீர்மானித்தேன். ஆனால் இந்த இரவு நிகழ்ச்சிக்கு ஏன் போனேன்? போகாமலிருந்திருந்தால் நடனம் முடிந் திருக்கும். சல கொலைகள் நடந்திருக்கும். காலையில் நிம்மதி நிலவியிருக்கும். இனி நிம்மதி இல்லை. பூர்வ குடிகளின் பெரும் தொல்லை ஏற்படும். அதற்குக் காரணம் நான்தான். ஏன் காரணமானேன்? ‘ என்று மட்டும் சில கேள்விகளைக் கிளப்பிக்கொண்ட இளையபல்லவனுக்கு விடை தெளிவாகத் தெரிந்திருந்தது. “மஞ்சளழகியின் வசீகரத் தோற்றம்தான் காரணம். அது விரித்த வலைதான் அடுத்து வரும் பல தொல்லைகளுக்கு விதை விதைத் திருக்கிறது” என்ற தீர்மானம் அவன் உள்ளத்தில் ஓங்கி நின்றது.

இப்படி இரண்டு பெண்களையும், அவர்கள் மறைமுகமாகத் தன்மீது சுமத்திவிட்ட பொறுப்புகளையும் எண்ணி எண்ணி வியப்பின் வசப்பட்ட இளையபல்லவன், பெண்ணெனும் ஒரு சிருஷ்டியில்லாவிட்டால் உலகத்தில் மற்ற சிருஷ்டிகளுமில்லை, தொல்லைகளுமில்லை, சண்டை சச்சரவுகளுமில்லை என்று ஆதிகாலம் தொட்டு வந்த புராணங்கள் சொன்ன வேதாந்தரீதியில் எண்ண மிட்டான். அந்த வேதாந்தம் பெருவாரியான மனித அ. கைய ௭ சமூகத்தை என்ன, பெரிய பெரிய அறிவாளிகளையும் எப்படிச் சீர்திருத்த முடியவில்லையோ அப்படியே இளையபல்லவனையும் சீர்திருத்த முடியவில்லை. அப்படிச் சீர்திருத்தாத காரணத்தால், தன் செய்கைகளில் சில நன்மைகளும் விளைந்திருப்பதாக நினைத்தான் சோழர் படைத்தலைவன். “கொள்ளைக்காரரை ஒரு புறமும் பூர்வகுடிகளை ஒருபுறமும் பாதி திருப்தி செய்தும் பாதி பயமுறுத்தியும் வைத்திருந்த காரணத்தாலேயே அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனின் ஆதிக்கம் பலப்பட்டிருந்தது. கொள்ளையர் மனத்தையும் கலைத்து விட்டேன். பூர்வகுடிகளையும் விரோதப்படுத்தி விட்டேன். ஆகவே இரண்டு சங்கடங்களுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் கூடிய மட்டும் என் சொற்படிதான் கேட்டாக வேண்டும். இனி அக்ஷயமுனைத் தளம் என் வசந்தான். அது மட்டு மல்ல, சூளூக்களின் பலத்தையே பெரும்பாலும் கடற் பகுதியில் நம்பி இருக்கும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துக்கு, இன்றைய சச்சரவுக்குப் பிறகு அவர்கள் உதவி அதிக மிருக்காதென்பது உறுதி. சூளூக்கள் திறமைமிக்க மாலுமிகள். அவர்கள் கடற் போராட்ட அரங்கிலிருந்து விலகினால், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் ஒரு கை உடைந்தது போலத்தான். இது பெரும் லாபம், என்று அத்தனை நிகழ்ச்சிகளையும் அவற்றால் ஏற்பட்ட பயன்களையும் கணக்குப் பார்த்துத் தன்னைத்தானே திருப்தி செய்து கொண்டான்.

இருப்பினும் பலவர்மன் கடைசியாகச் சொல்லி விட்டுப் போன சொற்கள் அப்பொழுதும் அவன் காதில் ரீங்காரம் செய்துகொண்டிருந்தன. “இளையபல்லவரே! நெருப்பைக் கிளறிவிட்டிருக்கிறீர். இதனால் பெரும் விபரீதங்கள் விளையும்” என்று அவன் சுட்டிக் காட்டியது, விளையக்கூடிய விபரீதங்களை (தன் மரக்கலம் தீக்கிரை யாகக்கூடும் என்ற உண்மை உட்பட) விவரித்ததும் அப்பொழுதும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அதனால் ஏற்பட்ட பெரும் கவலை, தன் செய்கையால் தன்மீது மண்டியிட்ட பெரும் பொறுப்புகள், அவன் மனத்தைப் பல திசைகளில் அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்தப் பொறுப்புகளை விடப் பெரும் பொறுப்பு அதே நேரத்தில் அக்ஷ்யமுனைக் கோட்டைக் குள் அவன்மீது சுமத்தப்பட்டு வந்ததை மட்டும் அவன் உணரவில்லை. அதைப்பற்றி மஞ்சளழகிக்கும் அவள் தந்தைக்கும் நடந்த விவாதத்தை மட்டும் அவன் அறிந் இருந்ததால், நங்கூரத்தை அந்த இரவிலேயே எடுத்துக் கப்பலின் பாய்களை விரித்துக் காற்று வரும் திசையில் போயிருப்பான். அத்தகைய பெரும் பொறுப்பைப் பற்றித் தான் பலவர்மன் தன் மாளிகையில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தான்.

வில்வலனும் பூர்வகுடிகளும் சென்றபின்பு இளைய பல்லவனை நோக்க உஷ்ணமான வார்த்தைகளை உதிர்த்து விட்டு மஞ்சளழகியுடன் கோட்டைக்குள் சென்ற பலவர்மன் தனது மாளிகையை அடைந்த பின்பும் சிதறிய சிந்தனைகளால் கலவரப்பட்ட உள்ளத்துடனிருந்ததால் அவன் முகத்தில் பெரும் கவலையும் குழப்பமும் காணப் பட்டன. இரவு நிகழ்ச்சிக்கு இளையபல்லவன் வந்ததால் தனக்கு மட்டுமின்றிக் கோட்டை மக்களுக்கும் பெரும் இமை விளையக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டதை அவன் சந்தேகமற உணர்ந்திருந்தான். மனிதர்களைத் தின்னும் பதக் இனத்தாரால் கோட்டைக்குள்ளும், சூளு இனத்தா ரால் நீரிலும் ஏற்படக்கூடிய பெரும் விபரீதங்களை அவன் அறிந்திருந்தான். கோட்டையின் காவல் சற்று அயர்ந் தாலும் மக்களை பதக் இனத்தார் தூக்கிச் செல்லவும் /ய நதி டையே உறா வீடுகளுக்குத் த வைக்கவும் தயங்க மாட்டார்களென் பதும், அக்ஷ்யமுனைத் தளத்தில் இனி எந்தக் கப்பலும் அபாய மின்றி ஓர் இரவுகூட நிற்க சூளூக்கள் அனுமதிக்கமாட்டார் களென்பதும் அவனுக்குத் திட்டமாகப் புரிந்திருந்தது. தவிர, அன்றைய இரவு நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட்டுள்ள சூளூக்களின் விரோதம் ஸ்ரீவிஜயத்தின் கடல் சக்தியையும் சிறிது குறைக்குமாதலால், சக்கரவர்த்தியான ஜெயவர்மனுக்கும் தான் சமாதானம். சொல்ல வேண்டி யிருக்குமென்பதும் அவனுக்குப் புரிந்தேயிருந்தது. இத்தகைய ிக்கல்களால் குழம்பிய மனத்துடனிருந்த பலவர்மன் அன்று தனது அறையை அடைந்ததும் பணியாள் கொண்டு வந்த உணவைத் தொடக்கூட மறுத்து ஆசனத்தில் சாய்ந்து கிடந்தான். அவன் எதிரில் அவனைப் போலவே தீவிர சிந்தனைகளுடன், ஆனால் வேறுவித சிந்தனைகளுடன், ஆனந்த நினைப்புகளுடன், அமர்ந் திருந்த மஞ்சளழகியும் தன் எதிரே தங்கக் கலத்திலிருந்த உணவைத் தொட்டுப் பார்க்கவில்லை.

அவள் மனத்தில் கவலையில்லை. பெருமிதமிருந்தது. துக்கமில்லை, மகழ்ச்சி இருந்தது. கடற்கரை நிகழ்ச்சிகளால் உணர்ச்சிகளின் சுழற்சியும் எழுச்சியும் இருந்தன. அதே அறையில் அன்று காலையில் பெரும் நிதானத்தையும் சாகசத்தையும் காட்டிய இளையபல்லவன் அன்று இரவில் தன் கலையால் இரண்டையும் கைவிட்டதை நினைத்துத் தன் கலையின் சக்தியை எண்ணிப் பெருமிதம் கொண் டாள் அவள். தன் கையாட, அவன் உணர்ச்சிகளாட எழுந்து மேடை நோக்க வந்ததை நினைத்துத் தான் விரித்த வலை அந்த வாலிபனை எத்தனை சுலபத்தில் வளைத்து விட்டது என்பதை நினைத்து மகழ்ச்சி கொண்டாள். வில்வலனுடன் போரிட்டதாலும் பிறகு நேர்ந்த கொலை யாலும் கூட்டம் குழம்பி இருந்த சமயத்திலும் அந்த வாலிபன் தன் இடையைக் கையால் தொட்டுத் தூக்கத் தன்னைப் புரவிமீது அமர்த்தயதை எண்ணி உணர்ச்சி களின் எழுச்சியாலும், சுழற்சியாலும் பெரிதும் தவித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பேரழகி.

“சே! சே! எத்தனை வெட்கம் கெட்டவள் நான்!” என்று மஞ்சளழகி தன்னைத்தானே கண்டித்துக் கொண் டாள். அது உண்மையில் கண்டனமா? இல்லையென்பது பருவத் துடிப்பின் வசப்பட்ட அந்தப் பைங்கிளிக்குத் தெரியும். தெரிந்தும் தன்னைத்தான் கண்டித்துக்கொண்ட தாகவே பாசாங்கு செய்தாள் அவள். இப்படி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான் காதலா? காதலுக்குப் பொய் அவசியமா?” என்றும் தன்னைத்தானே அவள் கேட்டுக் கொண்டாள். “ஆம், பொய் அவசியம்! காதல் பொய் மற்றப் பொய்களைப் போன்றதல்ல. மெய்யின்பம் தருவது. ஆனால் காதலே பொய்யாகக் கூடாது. காதலைப் பற்றிப் பொய் சொல்லிக் கருத்தை ஏமாற்றலாம். இதயத்தை மட்டும் ஏமாற்றக்கூடாது. எப்படி ஏமாற்ற முடியும்? அதற்குத்தான் உண்மை தெரியுமே. இல்லாவிட்டால் இப்படி ஏன் ‘படக் படக்’ கென்று இதயம் அடித்துக் கொள்கிறது!” என்று உள்ளத்துக்குச் சொல்லித் தவித்த மஞ்சளழக, இதயத்தை ஆசுவாசப்படுத்த இதயமிருந்த பகுதியில் கையையும் வைத்துக் கொண்டாள்.

எத்தனையோ குழப்பத்திலும் கவலையிலும் எதிரே உட்கார்ந்திருந்த பலவர்மன் தன் மகளின் முகத்தில் மாறி மாறி விளையாடிய உணர்ச்சிகளைக் கவனிக்கத் தவற வில்லை. எதையும் சுலபத்தில் ஆராயும் சக்தி கொண்ட அவன் கூரிய அறிவுக்கு அவள் இதயத்தைப் புரிந்து கொள்வது ஒரு பிரமாத காரியமாய் இல்லை. தன் மகளின் மனத்தை இளையபல்லவன் ஓரளவு பறித்துக் கொண்டு விட்டானென்பதை நடன நிகழ்ச்சியின்போதே புரிந்து கொண்டான் பலவர்மன். சுபத்திரை நடனத்தின் போது நீட்டப்பட்ட அபிநயக் கரங்கள் உண்மையில் சுபத்திரை யின் கரங்கள் அல்லவென்பதையும், மஞ்சளழகியின் இதயக் கரங்களேயென்பதையும், அப்பொழுதே புரிந்து கொண்டான் அவன். திரும்பக் கோட்டைக்கு வந்தபோது தன்னுடன் போசாமலே அவள் வந்ததையும், தன்னைப் போலவே உணவைத் தொடாமல் சிந்தனையில் ஆழ்ந்து விட்டதையும், அந்தச் சிந்தனையில் மகிழ்ச்சியின் சாயை எழுந்து முகத்தில் படருவதையும் கண்ட பலவர்மன் சித்தத்தில் திடீரென ஓர் எண்ணம் உருவெடுத்தது. அந்த எண்ணம் மட்டும் ஈடேறினால் பல கஷ்டங்கள் விடிந்து விடும் என்ற முடிவுக்கும் அவன் வந்தான். அதனால் புத்தம் புதிய பெரும் பொறுப்பு இளையபல்லவன் தலையில் சுமத்தப்படும்.

பிறகு அவன் தன்னிடமிருந்து தப்ப முடியாது என்பதையும் அவன் உணர்ந்தான். அந்தப் பொறுப்பை மட்டும் இளையபல்லவன் மீது சுமத்தி விட்டால், தனக்கும், கோட்டைக்கும், ஏன் அரசாங்கத் துக்குங்கூடப் பெரும் பலமும், பாதுகாப்பும் ஏற்பட்டுவிடும் என்று அறிந்ததால் தன் மகளை அணுகித் தன் யோசனையை மெள்ள மெள்ள விவரிக்க முற்பட்டான். அவன் விவரிக்க விவரிக்க மஞ்சளழகி பெரும் திகைப்புக் குள்ளானாள். தன் இதயத்தில் விளைவித்துக் கொண்ட காதலின் பொய்யல்ல அது, விபரீதமான மெய் என்று எண்ணிய அவள் தந்தையின் மெய்யும் தனது பொய்யும் கலந்த அந்த யோசனை ஏற்க முடியுமா, ஏற்பது முறையா என்று தன்னைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டாள். “நான் ஏற்றாலும் அவர் ஏற்பாரா?” என்ற ஒரு கேள்வியும் அவள் உள்ளத்தே எழுந்தது. அந்தக் கேள்வி விளைவித்தது வேதனையா? வாழ்வின் சோதனையா? புரியவில்லை அவளுக்கு. ஆனால் ஒரு பெரும் இன்ப உணர்ச்சி மட்டும் அவள் நரம்புகளை ஊடுருவிச் சென்றது. அதில் வேதனை யும் இருந்தது, சோதனையும் இருந்தது.