ஆத்தியாயம் – 17

முடியாத விழா

மக்களை அடக்கி ஆளும் திறனுள்ளவர்கள் உல கத்தில் சிலர்தான் தோன்றுகிறார்கள். அவர்கள் எந்த இனத்தில் தோன்றுகிறார்கள், எந்த இடத்தில் தோன்று கிறார்கள், ஏன் தோன்றுகிறார்கள் என்று திட்டமாகச் சொல்ல முடியாவிட்டாலும் உலகத்தில் சில பெரும் சாதனைகளைச் செய்யப் பிறக்கிறார்கள் என்று மட்டும் சொல்லலாம். அத்தகைய மனிதர்கள் உலகத்தின் வரலாற்றில் புத்தம் புது நிகழ்ச்சிகளைத் தீட்டுகிறார்கள். காலம் மறவாத கதைகளைச் சிருஷ்டித்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களுக்கென அண்டவன் ஏதோ அபூர்வ சக்தியை அளிக்கின்றான். அந்தச் சக்தியால் வலுவடை கின்றன அவர்கள் செயல்கள். தமிழகத்தின் வரலாற்றில் பொன் கதையொன்றைப் புனைந்து பேரிலக்கியமொன்றும் உருவாக வாய்ப்பளித்த கருணாகர பல்லவன் அத்தகைய அபூர்வ சக்திவாய்ந்தவன் என்பதை அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவனான பலவர்மன் சித்திரா பெளர்ணமியின் அந்த இரவில் சந்தேகத்துக்கு இடமின்றி உணர்ந்துகொண்டான்.

அந்தக் கடற்கரை மணலில் எத்தனையோ நடனங் களை நடத்தியிருந்தாலும், நடனங்களை சாக்காக வைத்துக் கொண்டு எத்தனையோ காரியங்களைச் சாதித்திருந் தாலும், எத்தனையோ பேர்வழிகளைப் பழி வாங்கி யிருந்தாலும், மற்ற அண்டுகளின் நடனங்களுக்கு வந்த உறுதியுடனும், இடசித்தத்துடனும் அன்றைய இரவு நடனத்துக்குப் பலவர்மன் வரவில்லை. சொர்ணபூமியின் பூர்வகுடிகளின் தலைவர் நால்வரும் வந்தால் குழப்பமும் பூசலும் விளையுமென்பதைத் திட்டமாக அறிந்திருந்த பலவர்மன் அத்தகைய பூசல்களையும் குழப்பத்தையும் சாதாரணமாக விரும்பும் அக்ஷ்யமுனைத் தலைவன், அன்று மட்டும் குழப்பத்தையோ பூசலையோ அடியோடு விரும்பவில்லை. ஏதாவது குழப்பம் ஏற்பட்டு இளைய பல்லவன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அக்ஷய முனைக்கும் தனக்கும் ஏற்படக்கூடிய பயங்கர விளைவை எண்ணிப் பெரும் பீதியடனேயே அன்றைய நடனத்துக்கு வந்திருந்தான் பலவர்மன். அகூதா பழிவாங்கும் முறை களையும் அவன் ஒரிடத்துக்கு வந்துவிட்டுப் போனால் அந்த இடம் சுடலைக்குச் சமானமென்பதையும் உணர்ந் திருந்த பலவர்மன், அன்று நடன நிகழ்ச்சி ஏன் நடக்கிற தென்ற வெறுப்புடனேயே வந்திருந்தான். அவனுக்கு அகூதாவிடம் அச்சம் ஒருபுறம், பூர்வகுடித் தலைவர்களிட முள்ள பயம் மற்றொரு புறம். இந்த இரண்டுவித கிலிகளும் அவனை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. நடன நிகழ்ச்சிக்கு வரும் பதக் இனத் தலைவர்களையோ சூளுக்களையோ தான் விரோதித்துக் கொண்டாலும், அக்ஷயமுனையில் அதிகநாள் வாழ்வது கஷ்டமென்பதை _ அவன் உணர்ந்திருந்தான். இராக் காலங்களில் பிசாசு களைப் போல் உலாவும் வழக்கமுடைய அந்த நாகரிக மக்கள், தலைவர்களால் ஏவப்பட்டால் பிரதிதினமும் அக்ஷயமுனைக்கு வந்து தொல்லை கொடுப்பார்களென் பதையும் பிறகு அக்ஷ்யமுனை வாழ்க்கை பெரும் நரக மாடிவிடுமென்பதையும் அவன் அறிந்திருந்தபடியால், அன்றைய நிகழ்ச்சியில் அதிகக் கலவரம் ஏதும் ஏற்படாம லிருக்கச் சற்று முன்னேற்பாடுடனேயே வந்திருந்தான். இளையபல்லவன் உயிருக்குத் தீங்கு ஏற்படும்போல் தோன்றினால் தன் சைகைப்படி நகர்ந்து அவனுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி. காவல்வீரர்களுக்குக் கண்டிப் பான உத்தரவிட்டதன்றி, பூர்வகுடித் தலைவர்கள் வந்தால் அவர்கள் மீதும் ஒரு கண் வைத்திருக்கும்படியும் கூறியிருந்தான். தவிர மண்டபத்தின் முன்னணியில் இளைய பல்லவன் உட்காருவான் என்பதை அவன் அளகித்திருந்த தால் அந்த இடத்தில் காவலையும் பலப்படுத்தியிருந்தான்.

இத்தனை முன்னேற்பாடுகளைச் செய்திருந்தும்கூட அவன் உள்ளத்தைச் சந்தேகமும் பயமும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. பலவர்மன் இயற்கையாகக் கோழை மனம் படைத்தவனல்லவென்றாலும், இளைய பல்லவனின் திடீர் வரவால் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் அவனைப் பெரும் பயத்திற்கே உள்ளாக்கியிருந்தன. ஆகவே எந்த விநாடியிலும் குழப்பதையும் பூசலையும் எதிர் பார்த்து, இருப்பினும், மேலுக்கு எந்தவித உணர்ச்சியையும் அதிகமாகக் காட்டாமலும் அமர்ந்திருந்த பலவர்மன் இடீரென்று மண்டபத்தின் முன்பு ஏற்பட்ட நிகழ்ச்சியால் ஒரு விநாடி. திகைத்தே போனான். பூர்வகுடித் தலைவர்கள் வழக்கம்போல் அன்றும் நடனம் துவங்கிய சிறிது நேரத் துக்குப் பின்பே வந்தது அவனுக்கு வியப்பாயில்லை. அவர்கள் வந்து தனது ஆசனத்துக்குப் பின்னால் வரிசை யாக நின்றதும் அவனுக்கு விசித்திரமாயில்லை. எந்த இளையபல்லவன் உணர்ச்சிவசப்படாதவன் என்று காலை யில் எடை போட்டானோ அந்த இளையபல்லவன் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து மேடையை நோக்கி விரைந்தது முதலில் வியப்பாயிருந்தது. அடுத்த விநாடி இரண்டு குறுவாள்கள் மோதித் தரையில் விழுந்தது துகைப்பாயிருந்தது.

திகைப்பும், வியப்பும் கலந்த உணர்ச்சிகளின் வசப்பட்ட பலவர்மன் வெகுசீக்கிரம் துகைப்பை உதறி விட்டு வியப்பின் வசமே சிக்கிக்கொண்டான். வில்வலன் குறுவாள் வீச்சால் ஏற்பட்ட விபரீதம் பெரும் குழப்பத்திலும், கொள்ளையர், பூர்வகுடிகள் கைகலப்பிலும் முடிவடையும் என்று எதிர்பார்த்தான் பலவர்மன். அத்தகைய ஒரு பூர்வபீடிகை அவ்விதக் கைகலப்பில் மூடிவது வருடாந்திரப் பழக்கமாதலால் அத்தகைய நிகழ்ச்சிகளையே எதிர்பார்த்த பலவர்மன் நிகழ்ச்சியில் புரட்சி ஏற்பட்டுவிட்டதைக் கண்டு பிரமிப்பின் எல்லையை எய்தினான். திடீரெனக் குழப்பத் த மூண்டு பரவி மனித உயிர்கள் பலவற்றைக் கொள்ளை கொண்டுவிடும் என்று எதிர்பார்த்த பலவர்மன், அந்தத் தீ ஆரம்பத்தி லேயே அணைக்கப்பட்டதையும் இளையபல்லவனின் நிதானமும் அதிகாரப் பார்வையும் அந்தக் கூட்டம் முழுமையையும் அடக்கியதன்றி அந்த நால்வரைக்கூடத் திகைக்க வைத்ததையும் கண்டு, இவன் சாதாரண மனிதனல்ல, இவனிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று எண்ணினான். கொள்ளைக் காரரை இளையபல்லவன் ஏற்கெனவே மித்ரபேதம் செய்து வைத்திருந்ததைப் பற்றியோ அவன் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கியதைப் பற்றியோ ஏதுமறியாத பலவர்மன், கொள்ளைக்காரர் மட்டுமின்றி அவர்கள் மாதர்களும் இளையபல்லவன் பக்கத்தில் சாய்ந்து அவன் சொன்னபடி கேட்டதைக் கண்டு அதற்குக் காரணம் தெரியாமல் குழப்பத்துக்கே உள்ளானான். அவன் வில்வலனையும் சொல்லால் மடக்கித் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு நடனத்தை மேற்கொண்டு நடத்த உத்தரவிட்ட போது, தான் இருப்பது கனவுலகமா நனவுலகமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது பலவர்மனுக்கு. அத்தனை சந்தேகத்திலும், குழப்பத்திலும், வியப்பிலும் ஓர் உண் மையைத் திட்டமாகத் தெரிந்தகொண்டான் அக்ஷ்ய முனைக் கோட்டைத் தலைவன். இளையபல்லவன் பெரும் கூட்டங்களை அடக்கி அளப் பிறந்தவன் என்ற உண்மை தான் அது.

இளையபல்லவன் அருகில் வில்வலன் அமீர்ந்ததுமே கூட்டத்தில் மீண்டும் அமைதி நிலவியது. அந்த நால்வரின் குறைகள் யாதாயிருந்தாலும் அச்சம் அந்தக் குறைகளில் ஒன்றாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு முன்னதாகவே இளையபல்லவன் வந்துவிட்டான். சுமார் ஐம்பது வீரர் களை மட்டும் துணைகொண்டு குழப்பமும் கொலையும் விளையும் அந்தப் பெரும் கூட்டத்திடை வந்து நின்ற நால்வர் அற்ப சொற்பமானவர்களல்ல வென்பதை இளையபல்லவன் புரிந்துகொண்டான். அந்த ஐம்பது பேரே கொள்ளையரின் பெரும் கூட்டத்துக்கு ஓரளவு அச்சத்தை விளைவித்திருக்கிறார்களென்பதையும் அங்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட சலசலப்பால் உணர்ந்துகொண்ட இளையபல்லவன், யபோரிடுவதில் அவர்கள் திறமை அற்பமாயிருக்க முடியாதென்றும் மூடிவு செய்தான். பூர்வகுடிகளின் திடகாத்திரமும், வேல்களையும் வாள் களையும் அவர்கள் தாங்கி நின்ற முறையும் ‘ஒவ்வொரு வீரனும் குறைந்தபட்சம் பத்துப் பேரையாவது வீழ்த்தும் ஆற்றலுள்ளவன் “ என்பதற்கு அத்தாட்சிகளாக விளங்கின. சாதாரண வீரர்களே அப்படியிருந்தால் தலைவர்களின் வீரம் அளவிட முடியாததாயிருக்க வேண்டுமென்று தீர்மானத்துக்கு வந்த இளையபல்லவன், வில்வலன் தன் முதுகுப் புறத்தில் குறுவாளெறிந்ததற்குக் காரணம் கோழைத்தனமல்லவென்பதையும் பழைய பழக்கத்தின் தோஷமேயென்பதையும் அறிந்தான். ஆகவே வீரனா யிருப்பவனை அவன் வீரத்தை எள்ளி நகையாடியே அடக்க வேண்டுமென்ற தீர்மானத்தால் அத்தனை சாமர்த்தியமாகப் பேசித் தன் வலையில் வில்வலனைச் சிக்க வைத்துப் பக்கத்திலும் அமர்த்திக் கொண்டான். இளையபல்லவன் பக்கத்தில் உட்கார்ந்த வில்வலனும் தன் சகாக்கள் மூவரையும் ஏதும் செய்ய வேண்டாமெனக் கண் மூலமே எச்சரித்துவிட்டு, ஏதும் நடக்காததுபோல் நடனத்தைக் கவனிக்க ஆரம்பித்தான்.

இளையபல்லவன் கட்டளையிடவே அதுவரை சித்திரப் பாவையென நடன மேடையில் நின்றிருந்த மஞ்சளழகி மீண்டும் நடனத்தைத் துவக்கினாள். அந்த நடனத்தில் பழைய விறுவிறுப்பே இருக்காதென நினைத் தான் இளையபல்லவன். இடையே தேக்கப்பட்ட கலை ஆம்சம் மீண்டும் சோபிப்பது கஷ்டமென்று எண்ணினான் அவன். ஆனால் குழப்பங்களை வருடா வருடம் கண்ட மஞ்சளழகி எந்தத் தடையும் ஏற்படாதது போல் மிக இயற்கையுடன் நடனத்தை மீண்டும் துவங்கினாள். பம்பரம் போல் மேடை மீது சுழன்று சுழன்று ஆடினாள். பாவாடை சக்கர வட்டமாகக் குடையென எழுந்து சுழல, கால் கொண்டைப் பரல்கள் ஜல்ஐல்லென்று ஒலிக்க, கைவளை யல்கள் சிலுசிலுக்க, கொண்டை முத்துச்சரங்கள் முடியின்மீது தாவித் தாவித் தவழ, ஆடினாள் மஞ்சளழகி. சுபத்திரையின் சோகம் கலைந்தது, விடிமோட்சம் வந்தது. கண்ணனும் வந்தான். இந்த இடத்தில் அவள் கண்ணனைப் போல் குழைந்தாள், மெல்லச் சிரித்தாள், விஷமக் கண் சிமிட்டினாள், சுபத்திரையைப்போல் வெட்கப்பட்டாள், சேடிகளிடம் விஷமம் செய்தாள், அர்ஜுன சந்நியாசி போல் கம்பீரமாக நடந்தாள், சுபத்திரையின் கையைப் பிடித்தாள், கடைசியில் மண வறைப்படலம் வந்தது, மகழ்ச்சிவெள்ளம் புரண்டது, கடற்கரை முழுதும் களிவெறி மண்டியது.

நிகழ்ச்சி முடிந்தால் நிலை என்னவாகும் என்பதை நிர்ணயிக்க முடியாததால் அந்தக் களி நடனம் நடந்து கொண்டிருக்கையிலேயே இளையபல்லவன் சரேலென எழுந்து நடனமண்டபத்தின் மீது மின்னல் வேகத்தில் ஏறி நின்று நடனத்தைச் சற்று நிறுத்தினான். கூட்டத்தின் கூச்சலையும் கையமர்த்தி அடக்கினான். அத்துடன் அத்தனை கூட்டத்துக்கும் கேட்கும் வகையில் இரைந்து பேசவும் தொடங்கினான் “நான் தமிழ் நாட்டவன். நடனத்தில் சிறந்த அந்தப் பெருநாட்டிலிருந்து வந்திருக்கிறேன். இருப்பினும் இத்தகைய அற்புத நடனத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. நடனத்தின் சிறப்பு மட்டுமல்ல நான் இன்று கண்டது. நடனமாடிய இந்த மஞ்சளழகியின் கலைச் சிறப்பையும் கண்டேன்” என்று கூறினான்.

இந்த வார்த்தைகளை இளையபல்லவன் சொர்ண பூமியின் உயர்குடி. மக்கள் பேசிய காவி பாஷையில் மட்டும் பேசவில்லை, &ழ்க்குடி மக்கள் பேசி வந்த குரோமோ மொழியிலும் பேசினான். அந்தச் சிறப்புரை ஒருமுறைக்கு இருமுறை சொல்லப்பட்டதால் மட்டுமல்ல, கீழ்க்குடி மக்களின் மொழியும் அவனுக்குத் தெரிந்தது என்ற காரணத்தால் கொள்ளையர் மட்டுமின்றிக் -குரோமோ மொழியைப் பெரும்பாலும் பேசிவந்த பூர்வகுடித் தலைவர்களைச் சார்ந்த வீரர்களும் பெரிதாகக் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தார்கள்.

பிறகு இரண்டு மொழிகளையும் பாதிப்பாதி கலந்து பேசினான் இளையபல்லவன். “இத்தகைய அழகிய நடன நிகழ்ச்சியில் வருடா வருடம் கொலைகளும் குழப்பங்களும் ஏற்படுவதாக அறிகிறேன். இந்த ஆண்டு அத்தகைய உகுரோமோ என்பது சொர்ணபூமியின் தொழிலாளர், கீழ்க்குடி மக்கள் பேசிவந்த மொழி. விபரீதம் ஏதுமின்றி நடனம் முடிந்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, இனி ஒவ்வோர் அண்டும் இப்படித்தான் நிகழ்ச்சி முடியும். ஏனென்றால் இனி நான் இந்த அக்ஷய முனையில் தங்கத் தீர்மானித்திருக்கிறேன். அதற்கு அனுமதி அளித்துள்ள அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவர் பலவர்மருக்கு இதோ என் காணிக்கை” என்று சொல்லிக் கொண்டே என்ன நடக்கிறதென்பதைப் பலவர்மன் ஊகிக்குமுன்பே மேடையிலிருந்து இறங்கி இரண்டு எட்டில் அவன் இருப்பிடத்தை அடைந்த இளைய பல்லவன் தன் கச்சையிலிருந்த முத்துமாலையொன்றை அவன் கழுத்தில் சூட்டினான்.

அத்துடன், “இதோ சொர்ண பூமியின் பூர்வகுடித் தலைவர்களுக்கு என் வெகுமதி.” என்று கூறிப் பலவர்மனுக்குப் பின்னால் நின்றிருந்த மூவர் கழுத்திலும் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்துமாலைகளைச் சூட்டிவிட்டான். அடுத்த வினாடி. மீண்டும் மேடைமீது தாவி ஏறிய இளையபல்லவன், மடியில் இருந்த மாணிக்க மாலையை எடுத்து விளக்கொளியில் காட்டினான். அதிலிருந்த சிவப்பு ரத்தினங்கள் விளக்கொளியில் பெரும் தீப்பந்தங்களெனச் சுடர் விட்டன. அந்த மாலை மஞ்சளழகியின் முகத்துக்கு எதிரேயிருந்ததால் அதன் சிவந்த ஒளிகள் அவள் முகம் பூராவும் விழுந்து முகத்தையே மாணிக்கங்களால் இழைத்த பிரமையை விளைவித்தன. “இந்த மாணிக்க மாலை விலை மதிக்க முடியாதது, எனக்குப் பாலித்தீவின் மன்னரால் கொடுக்கப்பட்டது. இது அரச வம்சத்தை அலங்கரிக்க வேண்டிய பொருள். ஆகவே உங்கள் நடன அரசிக்கு, நடன மாணிக்கத்துக்கு, இதை நான் பரிசாக அளிக்கிறேன், “ என்று மஞ்சளழகியின் கையில் மாலையைக் கொடுத்தான்.

அன்றிரவு ஏற்பட்ட பல நிகழ்ச்சிகளாலும் நிதானம் குன்றாத மஞ்சளழகி மகழ்ச்சியுடன் அந்த மாலையைப் பெற்றுக் கொண்டாள். கழுத்திலும் அணிந்து அழகு பார்த்தாள். கூட்டத்தின் மகிழ்ச்சிக் கூச்சல் வானைப் பிளந்தது. “இத்துடன் இந்த விழா முடிகிறது” என்று அறிவித்தான் இளையபல்லவன்.

அவன் இரைந்தே பேசினான். அவன் குரலைவிடப் பலமாக எழுந்தது இன்னொரு குரல். “இல்லை. விழா முடியவில்லை.” என்று கூவிய வில்வலன் தனது வாளை உருவிக் கையில் பிடித்துக்கொண்டு மேடைக்கெதிரே பயங்கரமாக நின்றான். “என் ஆசையைத் தீர்ப்பதாக உறுதி கூறியிருக்கிறாய். அது தீர்ந்த பிறகுதான் இந்த விழா முடியும். இல்லையேல் நீ முடிந்துவிடுவாய். இங்கு மற்றும் பலரும் முடிந்துவிடுவார்கள். எடு வாளை.” என்று கூறிக் கொண்டே மேடை மீது ஒரு காலையும் எடுத்து வைத்தான்.

கூட்டம் மீண்டும் பயத்தின் வசம் சிக்கியது. பெரும் விபரீதம் அடுத்தபடி நேரிடுவதைத் தடுக்க முடியாதென பலவர்மனும் முடிவுக்கு வந்தான். அதுவரை அச்சம் தோன்றாத மஞ்சளழகியின் முகத்திலும் அச்சத்தின் சாயை பெரிதாகப் படர்ந்தது. அதுமட்டுமல்ல, இளையபல்லவன் இடையில் அவன் வாள் இல்லாததையும் கவனித்ததால் மூர்ச்சை போடும் நிலைக்கு அவள் வந்துவிட்டாள்.